தைவான் அருகே, ஜப்பானியத் தீவில் ஏவுகணைகள் நிறுத்திவைக்கப்படும்

1 mins read
39b8cffa-ef07-417e-9cd1-3b3b63fce8e1
ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, நவம்பர் 1ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்த ஆசியான், ஜப்பான் தற்காப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். - படம்: ஏஎஃப்பி

அமெரிக்காவுடன் உறவுகளை வலுவாக்கி, ஜப்பானின் தற்காப்பு அரண்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார்.

தைவானுக்கு அருகில் ஜப்பானுக்கு தெற்கே உள்ள யோனாகுனி தீவில் இயங்கும் ஜப்பானிய ராணுவத் தளத்தை முதல் முறையாகப் பார்வையிட்டபின் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஷின்ஜிரோ இவ்வாறு கூறியுள்ளார்.

“அமெரிக்காவுடன் நல்லுறவை மேம்படுத்துவது வட்டார பதற்ற நிலையை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல,” என்றார் அவர்.

தைவானுக்கு கிழக்கே 110 கிலோ மீட்டர் தூரம் உள்ள யோனாகுனித் தீவில் ஜப்பான் நடுத்தர ஏவுகணை அமைப்புகளை நிறுத்திவைக்கத் திட்டமிடுகிறது. வலுபெற்றுவரும் சீன ஆதிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜப்பான் தனது தென் தீவுகளைப் பாதுகாக்கும் நடைமுறைகளை ஆராய்கிறது.

அண்மையில், தைவான் தாக்கப்பட்டால் ஜப்பான் உதவும் என்று பிரதமர் சானே தக்காய்ச்சி கூறியது சீனாவைச் சினப்படுத்தியது. பொருளாதாரக் கட்டுப்பாடுகளை சீனா ஜப்பான் மீது சுமத்தியது.

முக்குளிப்புக்குச் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான யோனாகுனித் தீவில் வான்வெளியையும் கடல் பரப்பையும் கண்காணிக்கும் மையத்தை ஜப்பானிய ராணுவம் செயல்பாட்டில் வைத்துள்ளது.

யோனாகுனித் தீவுக்கு வரும் முன்பாக, தற்காப்பு அமைச்சர் கப்பல்களைத் தாக்கும் எரிபடைகளைக் கொண்ட இஷிகாக்கி தீவையும் வான் கண்காணிப்பு வசதியும் ஆயுதக் கிடங்கும் அமைந்துள்ள மியாக்கோ தீவையும் பார்வையிட்டுள்ளார். அமெரிக்காவுடன் கூட்டாக ஒகிநாவாத் தீவில் ராணுவத் தளங்களை ஜப்பான் நிறுவுவதும் கவனத்துக்குரியது.

குறிப்புச் சொற்கள்