கிள்ளான்: மலேசியாவின் பண்டார் புக்கிட் திங்கியில் உள்ள தமது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து உணவு எடுக்கச் சென்றபோது காணாமல்போன 12 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அந்தச் சம்பவம் அக்டோபர் 8ஆம் தேதி நடந்தது. சிறுமியைக் கடத்திய சந்தேகத்தின்பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரைக் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
சிறுமி அக்டோபர் 12ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிவாக்கில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெற்கு கிள்ளான் காவல்துறைத் தலைவரான உதவி ஆணையர் சா ஹூங் ஃபொங் தெரிவித்தார்.
‘சிறுமி கடத்தப்பட்டதாக நம்பப்படுவதை விசாரணைகள் காட்டுகின்றன,” என்றார் அவர்.
மேலும் கிடைத்த வேவுத் தகவல்களின் அடிப்படையில், ‘செகாம்புட் டாலாம்’, ‘செட்டியா அலாம்’, ‘பண்டாமரன்’ ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
அவற்றில் 13 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு ஆடவர்களும் இரண்டு பெண்களும் தடுத்துவைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சிறுமியைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டதாக உதவி ஆணைய சா தெரிவித்தார்.
சிறுமியின் தாயார் அவளைக் காரிலிருந்து உணவை எடுத்துவரும்படி கேட்டுக்கொண்டதால், சிறுமி கார் நிறுத்தும் இடத்திற்குச் சென்றதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின.
தொடர்புடைய செய்திகள்
“தனியாகச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை,” என்று திரு சா கூறினார்.