காணாமல்போன மலேசிய நடிகை சவூதி அரேபியாவில் காலமானார்

1 mins read
93cadaac-43ed-466d-b9f8-af6ac85b157a
மலேசிய நடிகை நடியா கெசுமாவுக்கு விமான நிலையத்தில் தரை இறங்கியபோது இதயச் செயலிழப்பு ஏற்பட்டது. - படம்: முஹமட் கமருல் கபிலன்/ ஃபேஸ்புக்

பெட்டாலிங் ஜெயா: சவூதி அரேபியாவின் அனைத்துலக விமான நிலையத்தில் காணாமல்போன மலேசிய நடிகை நடியா கெசுமா, இதயச் செயலிழப்பால் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, அவரது மகளான மைரா சமூக ஊடகம் வழியாக உறுதிப்படுத்தினார் என்று ஆஸ்ட்ரோ அவானி ஒளிபரப்பு கூறியது. “என்னுடைய தாயார் நடியா கெசுமாவதி அப்துல் கரிம் ஜனவரி 15ஆம் தேதி காலை 8.05 மணிக்கு இறைவனிடம் சென்றுவிட்டார். “அம்மாவுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, அவரது ஆன்மாவின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படவும் அவர் கடவுளால் ஆசீர்வதிக்கப்படவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று பதிவில் அவர் எழுதியிருந்தார். அறிக்கையின்படி காலஞ்சென்ற நடிகைக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டதால் ஜெட்டா விமான நிலையத்தில் வந்து இறங்கிய அதே நாளில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது மரணத்தைக் கணவரும் பேராசிரியருமான முஹமட் கமருல் கபிலன் அப்துல்லாவும் அவரது நெருங்கிய நண்பரான நடிகை அன்னி அப்துல்லாவும் அவரவர் சமூக ஊடகப் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர். நடியா கெசுமாவதி அப்துல் கரிம், 49, எனும் உண்மையான பெயர் கொண்ட நடியா கெசுமா ஜனவரி 14ஆம் தேதி சவூதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல் அசிஸ் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. பயண நிறுவனம் ஒன்று, ஜனவரி 14 முதல் 28 வரை ஏற்பாடு செய்த உம்ரா மற்றும் யாத்திரை குழுவைச் சேர்ந்த 21 பேரில் ஒருவராக அவர் பயணம் செய்திருந்ததாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்