டென்பசார்: இந்தோனீசியாவின் பாலி தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காணாமற்போன சவூதி அரேபிய சுற்றுப்பயணியைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாலியின் பாடுங் வட்டாரத்தில் உள்ள பாத்து பெலிக் கடற்கரைக்கு அருகே நீந்திக்கொண்டிருந்தபோது அவர் காணாமல் போனார். பிரபல சுற்றுலாத் தலமான பாலியில் அண்மைக் காலமாக இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
காணாமற்போன 29 வயது அல்ஹாவ்வாவி அசாத் முகம்மது என்ற ஆடவர், ரஷ்யாவைச் சேர்ந்த தனது 30 வயது காதலருடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் நீந்திக் கொண்டிருந்தார். திடீரென பலமாக எழுந்த கடல் அலையால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.
எல்டி என்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள அவரின் காதலர் உடனடியாக நீச்சல் மீட்புப் பணியாளர்களிடம் தெரியப்படுத்தினார். நீச்சல் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக மீட்புப் பலகைகளைக் கொண்டு தேடல் பணிகளில் ஈடுபட்டனர்.
அன்று பிற்பகல் 3.10 மணி வரை திரு அல்ஹாவ்வாவி காணப்படவில்லை. பின்னர் நீச்சல் மீட்புப் பணியாளர்கள் சம்பவம் குறித்து பாலி தேடல், மீட்பு அமைப்பிடம் (பசார்னாஸ்) தெரியப்படுத்தினர்.
அதற்குப் பிறகு ஆறு மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக பசார்னாஸ் தலைவர் ஐ நியோமான் சிடாக்கார்யா கூறினார்.
புதன்கிழமை (ஜூலை 9) தேடல் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பபட்டு தீவிரப்படுத்தப்பட்டன.
பாலியின் கடற்பகுதிகள் கொந்தளிப்பாக இருப்பதுண்டு. அதன் காரணமாக அங்கு பலர் காயமடைந்துள்ளனர், சிலர் உயிரிழந்துள்ளனர்.

