மிசூரி: ஆடவர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் செப்டம்பர் 24ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது.
21 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு எதிராக வாதாடி மரண தண்டனையைப் பெற்றுத் தந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்தும் 55 வயது மார்செலஸ் வில்லியம்சின் உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2003ஆம் ஆண்டில் ஃபெலிஷியா கேய்ல் எனும் முன்னாள் செய்தியாளரை அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொன்றதற்காக வில்லியம்சுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தக் கொலையைத் தாம் செய்யவில்லை என்று வில்லியம்ஸ் கடைசி வரை தெரிவித்தார்.
இந்நிலையில், வில்லியம்ஸ் நிரபராதியாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்ததாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
சிறிதளவு சந்தேகம் எழுந்தால்கூட மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று செயிண்ட் லியூஸ் கவுன்ட்டி அரசு தரப்பு வழக்கறிஞர் வெஸ்லி பெல் தெரிவித்தார்.
தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி கடைசி நேரத்தில் வில்லியம்ஸ் சமர்ப்பித்த மனுவை மிசூரி நீதிமன்றமும் ஆளுநர் மைக் பார்சனும் ஏற்க மறுத்தனர்.

