ஜோகூரில் 258 இந்தியப் பட்டக்கல்வி மாணவர்களுக்கு மித்ராவின் மடிக்கணினிகள்

ஜோகூரில் 258 இந்தியப் பட்டக்கல்வி மாணவர்களுக்கு மித்ராவின் மடிக்கணினிகள்

படம்: த ஸ்டார்

20 Jun 2026 - 3:26 pm

1 mins read

ஜோகூர் பாரு: மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவின் (மித்ரா) மாணவர் சாதனத் திட்டத்தின்கீழ் ஜோகூரில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 258 இந்திய இளங்கலைப் பட்டக்கல்வி மாணவர்கள் மடிக்கணினிகளைப் பெற்றுள்ளனர்.

மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (யுடிஎம்), மலேசிய துன் ஹுசைன் ஓன் பல்கலைக்கழகம் (யுடிஹெச்எம்), கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (யுனிகேஎல்), சிட்டி பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

“ஜோகூர் மாநிலத்தில் திட்டமிட்டபடி மடிக்கணினி விநியோகம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும்,” என்று மனிதவளத்துறை அமைச்சர் ஆர். ரமணனின் பிரதிநிதியாகப் பேசிய மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் கூறியதாக த ஸ்டார் வெளியிட்ட செய்தி தெரிவித்தது.

இந்தத் திட்டம், நாடு முழுவதும் தகுதிபெற்ற 3,000 இந்திய இளங்கலைப் பட்டக்கல்வி மாணவர்களுக்குப் புதிய மடிக்கணினிகளை வழங்கும் ஒரு தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த முயற்சியானது, மே 10ஆம் தேதியன்று மலாயா பல்கலைக்கழகத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிமால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு தேசிய அளவிலான திட்டத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தொடக்க விழாவின்போது, ​​மித்ராவின் ஒதுக்கீட்டை 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிப்பதாகத் திரு அன்வார் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பல்கலைக்கழகம்ஜோகூர் பாருஇளங்கலை