புத்ராஜெயா: மலேசியாவுக்குள் வெளிநாட்டினரைக் கடத்திய கும்பலைப் பிடித்துவிட்டதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, கிளந்தான் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதில் அந்த 12 பேர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கைதானவர்களில் ஒன்பது ஆடவர்களும் மூன்று பெண்களும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் நிறுவன உரிமையாளர்கள்.
கைதானவர்களில் மூவர், வெளிநாட்டவர்களை மலேசியாவுக்குள் சட்டவிரோதமாகக் கொண்டு வரும் பணிகளில் ஈடுப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிடிபட்டவர்களில் ஐந்து பேர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முனையம் 2ல் பணியமர்த்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடத்தல்களின் மூலம் இச்சட்டவிரோத கும்பல் மில்லியன் கணக்கில் (ரிங்கிட்) லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் இடைப்பட்ட காலகட்டத்தில் கும்பலுக்கு 4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகை கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தகுந்த ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை மலேசியாவுக்குள் கொண்டு செல்ல உதவியதற்காக இத்தொகை செலுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
மலேசியாவின் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் பணிபுரிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இக்கும்பலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

