அமெரிக்கப் பள்ளிகளில் பரவும் கைப்பேசித் தடை

1 mins read
9841efb8-2a01-4734-9ba5-de32d9d4ce60
கலிஃபோர்னியா முதல் ஃபுளோரிடா வரை ஏறக்குறைய 76 விழுக்காடு அமெரிக்கப் பள்ளிகளில் முழுமையாகவோ பகுதியாகவோ கற்றல் அல்லாத கைபேசிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: பெக்சல்

அலெக்சாண்டிரியா: அமெரிக்கப் பள்ளிகளில் மாணவர்கள் முழுக் கவனம் கற்றலில் செலுத்துவற்காக கைப்பேசிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அடுத்து அமெரிக்கப் பள்ளிகளிலும் கைப்பேசித் தடை பரவி வருகிறது.

இதற்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும் மறுபக்கம் பலர் எதிர்க்கின்றனர்.

பள்ளியில் இருக்கும்போது திறன்பேசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க கட்டுப்பாடுகள் உதவும் என்று ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால், இந்த நடவடிக்கைகள் பதின்மவயதினரை, அவர்கள் மின்னிலக்க உலகத்திற்குத் தயார்படுத்தத் தவறிவிடுகிறது என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

வர்ஜினியாவில் உள்ள மார்க் டுவைன் பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவரான ஹேடன் ஜோன்ஸ், 2024 செப்டம்பரிலிருந்து பள்ளியில் கைப்பேசியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு கைப்பேசியை அதற்குரிய ஒரு பையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும்

எட்டாம் வகுப்புக்குச் செல்லும்போது தடை நீங்கும் என்று அவர் நம்புகிறார்.

பள்ளி முதல்வரான மேத்யூ மோஃப், தடையை அமல்படுத்துவதும் மாணவர்களின் விருப்பத்தை வெல்வதும் சவாலானது என்பதை ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் பெரும்பாலான பிள்ளைகள் விதிகளைப் பின்பற்றுகிறார்கள் என்றார் அவர். கைப்பேசிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வகுப்பறையில் கவனச் சிதறல்கள் குறைந்துள்ளன. இணையத் துன்புறுத்தல்கள், பாடங்களைத் தவிர்ப்பதற்காக மாணவர்கள் ஒன்றுகூடுவதும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்