ஒட்டாவா: கனடாவின் ஆளும் மிதவாதக் கட்சி ஏப்ரல் திங்கட்கிழமை 28ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இருப்பினும் அது பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்குமா என்பது இன்னும் கேள்விகுறியாக இருப்பதாய் சிடிவி, சிபிசி செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிகளையும் ஆக்கிரமிப்பு மிரட்டல்களையும் கையாள வலுவான ஆணை வேண்டும் என்று பிரதமர் மார்க் கார்னி கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான 172 இடங்களை மிதவாதக் கட்சி இன்னும் கைப்பற்றவில்லை என்று செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டன.
முடிவுகள் தெளிவாகத் தெரிவதற்குச் சிறிது நேரம் பிடிக்கலாம் என்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாநிலம் அதை தீர்மானிக்கக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. அங்குதான் வாக்களிப்பு இறுதியாக நடைபெற்றுமுடிந்தது.
ஆளும் மிதவாதக் கட்சி 156 இடங்களைக் கைப்பற்றியது. கன்சர்வடிவ் கட்சி 145 இடங்களைக் கைப்பற்றியது.
வரிகள் காரணமாக அமெரிக்காவைக் கடுமையான முறையில் எதிர்கொள்ளப்போவதாகச் சொன்ன திரு கார்னி, அமெரிக்காமீது சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள கனடா பில்லியன்கணக்கில் செலவு செய்யவேண்டியிருக்கிறது என்றார்.
கனடாவின் நான்கு பொதுத் தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றது மிதவாதக் கட்சி.
உள்ளூர் விவகாரங்களில் கவனம் செலுத்திய கன்சர்வர்டிவ் கட்சிக்குத் தேர்தல் பெரிய ஏமாற்றமாக அமைந்தது.