மலேசியாவில் உருவெடுத்துள்ள ‘நவீன’ பிச்சைக்காரர்கள்

மலேசியாவில் உருவெடுத்துள்ள ‘நவீன’ பிச்சைக்காரர்கள்

2 mins read
மூன்று மணி நேரத்தில் 100 ரிங்கிட் வரை கிடைக்கும்
9ccd7085-a66a-4a55-b9c9-75c29cca3c58
ஜோகூர் பாருவில் பெட்ரோல் நிலையங்கள், ரமலான் மாத இரவுச் சந்தைகள் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் வேடமிட்டு சிறுவர்களும் நன்கொடைகள் கேட்கின்றனர். - படம்: த ஸ்டார், ஆசியா நியூஸ் நெட்வொர்க்

கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது ‘நவீன’ பிச்சைக்காரர்கள் உருவெடுத்துள்ளனர்.

அவர்கள் குழந்தைகள் விரும்பும் ‘கார்ட்டூன்’ பாத்திரங்களைப்போலவும் பல வடிவங்களில் மாறுவேடங்கள் பூண்டு, மக்களிடையே ‘நன்கொடை’ என்ற பெயரில் பிச்சை எடுப்பதாக அறியப்படுகிறது.

பெரியவர்களுடன் சேர்ந்து சிறுவர்களும் வேடமிட்டு நன்கொடைகள் வசூலிக்கின்றனர். இந்தப் பிரச்சினை ஜோகூர் பாரு மட்டுமல்லாது தலைநகர் கோலாலம்பூரிலும் தலையெடுத்துள்ளது.

பெட்ரோல் நிலையங்கள், ரமலான் மாத இரவுச் சந்தைகள், பேரங்காடிகள் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் வேடமிட்டு ஒருசிலர் குழுவாகவும் தனியாகவும் செயல்படுகின்றனர்.

மாறுவேடத்தில் உள்ளோரிடம் புகைப்படங்கள் எடுக்க குழந்தைகள் விரும்புவதால் பெற்றோரும் அதற்கு அனுமதிக்கின்றனர். அதன்பிறகு நன்கொடைகள் கேட்பதால் தவிர்க்கமுடியாமல் அவர்கள் பணத்தை மாறுவேடத்தில் உள்ளோர் கழுத்தில் தொங்கும் பெட்டிகளில் போடுகின்றனர்.

சில நேரங்களில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையே சென்று நன்கொடைகள் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் ‘கியூஆர் கோட்’ முறையிலும் பணம் வழங்க வசதிகள் உள்ளன என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சிறந்த முறையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள வேடங்களின் உத்தேச விலை $300 (மலேசிய 1000 ரிங்கிட்) வரை இருக்குமென்று தெரிகிறது. ஒன்பது வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் இவ்வாறு வேடமிட்டு பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். அவர்களில் ரோஹிங்கியா அகதியும் அடங்குவர்.

மூன்று மணி நேரத்தில் 100 ரிங்கிட் வரை கிடைக்கும் என்று அவ்வாறு வேடமிட்ட ஒருவர் செய்தியாளரிடம் குறிப்பிட்டார்.

அவர்களைத் தடுக்க மலேசிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்க ஜோகூர் சமூக நலத் துறையிடம் (JKM) இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராகிம் கூறினார்.

இதுபோன்று பிச்சை எடுக்கும் செயல்களில் ஈடுபடுவோரிடம் நன்கொடைகள் வழங்க வேண்டாம் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்