$2.87 பில்லியன் இழப்பீடு வழங்க மொடர்னா இணக்கம்

கொவிட்-19 தடுப்புமருந்துக் காப்புரிமை விவகாரம்

$2.87 பில்லியன் இழப்பீடு வழங்க மொடர்னா இணக்கம்

1 mins read
43dc3f79-5404-4464-b302-2cdbcb47d245
அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் நகரில் உள்ள மொடர்னா நிறுவனத்தின் தலைமையகம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வான்கூவர்: மொடர்னா நிறுவனம், கொவிட்-19 காப்புரிமைப் பிரச்சினையின் தொடர்பில் ஜெனவன்ட் சயின்சஸ் நிறுவனத்திற்கும் ஆபியூட்டஸ் பயோஃபார்மா நிறுவனத்திற்கும் 2.25 பில்லியன் அமெரிக்க டாலர் ($2.87 பில்லியன்) வரை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ரோய்வன்ட் சயின்சசின் கிளை நிறுவனம் ஜெனவன்ட் சயின்சஸ்.

காப்புரிமை குறித்த வழக்கு நீண்டகாலமாக நடைபெற்றது. அதற்குத் தீர்வுகாண நிறுவனங்கள் புதன்கிழமை (மார்ச் 3) இணங்கின.

அதன்படி, மொடர்னா $950 மில்லியன் அமெரிக்க டாலரை இவ்வாண்டு (2026) ஜூலையில் கொடுக்கும். இன்னொரு வழக்கின் மேல்முறையீட்டைப் பொறுத்து, கூடுதலாக 1.3 பில்லியன் அமெரிக்க டாலரைத் தர அது முடிவுசெய்துள்ளது.

மொடர்னா, அதன் கொவிட்-19 தடுப்புமருந்துத் தயாரிப்பில் ஜெனவன்ட், ஆபியூட்டஸ் பயோஃபார்மா நிறுவனங்களுக்குச் சொந்தமான லிப்பிட் நானோ துகள்கள் எனும் ‘எல்என்பி’ தொழில்நுட்பத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. உடன்பாட்டின்படி, எதிர்காலத்தில் தடுப்புமருந்துத் தயாரிப்பில் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் காப்புரிமைத் தொகை எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று மொடர்னா அறிக்கையொன்றில் தெரிவித்தது.

லிப்பிட் நானோ துகள்கள், சிறிய பாதுகாப்புக் கவசம் போன்று செயல்படுகின்றன. எளிதில் உடையக்கூடிய எம்ஆர்என்ஏ மூலக்கூறுகளை மனித உயிரணுக்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல அவை உதவுகின்றன.

மொடர்னாவின் பங்குகள் 10 விழுக்காட்டுக்கும் மேல் கூடின. ஆபியூட்டஸ் பங்குகள் 11 விழுக்காடும் ரோய்வன்ட் பங்குகள் ஒரு விழுக்காடும் உயர்ந்தன.

குறிப்புச் சொற்கள்