தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க் மேயர் தேர்தல் வேட்பாளர் மம்தானியைச் சாடும் மோடி ஆதரவாளர்கள்

2 mins read
b43ed83a-49b1-4e2c-a003-51a1aefcaba2
திரு ஸோரான் மம்தானியை இந்து எதிர்ப்பாளர் என்றும் அவமானச் சின்னம் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சு வர்மா டுவிட்டரில் பதிவிட்டார். - படம்: புளூம்பர்க்

புதுடெல்லி: அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மேயராகப் பதவி வகிக்க விழையும் ஸோரான் மம்தானிக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

இந்திய வம்சாவளியான திரு மம்தானி, நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்.

இவர் உகாண்டாவில் பிறந்தவர். திரைப்படத் தயாரிப்பாளரான மீரா நாயரும் கல்விமான் மஹ்முட் மம்தானியும் இவரது பெற்றோர்.

மேயர் தேர்தலில் வெற்றிபெற்றால், நியூயார்க் மேயர் பதவி வகிக்கும் முதல் தென்னிந்தியர், முதல் முஸ்லிம் என்று அவர் அறியப்படுவார்.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் இந்து சமயம் தொடர்பானவற்றையும் திரு மம்தானி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு எதிராகப் பலர் சமூக ஊடகத்தில் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்து திரு மம்தானி அதிருப்தி தெரிவித்திருந்தார். அந்தக் கோயில் கட்டப்படக்கூடாது என்று கூறி 2020ஆம் ஆண்டில் அதை எதிர்த்து நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம் செய்ய அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும் 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த இந்து-முஸ்லிம் கலவரம் குறித்து அவர் கருத்துரைத்திருந்தார். அக்கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் மாண்டதாக 2005ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் தெரிவித்தது.

அந்தக் கலவரம் தொடர்பாகப் பிரதமர் மோடியைப் போர்க் குற்றவாளி எனத் திரு மம்தானி வர்ணித்தார்.

பொதுவாக, இந்திய வம்சாவளியினர் வேறு நாடுகளில் முக்கியப் பதவி வகிக்கும்போது இந்தியக் குடிமக்கள் அதைக் கொண்டாடுவர். ஆனால், திரு மம்தானியின் கொள்கைகள், காஸா விவகாரத்தில் பாலஸ்தீனர்களை அவர் ஆதரிப்பது, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மீது அவர் கொண்டிருக்கும் வெறுப்பு ஆகியவற்றால் திரு மம்தானியை இந்திய மக்கள் ஆதரிக்கவில்லை,” என்று ‘த பிரின்ட்’ எனும் இணையம் வழி செய்தித் தளத்தின் நிறுவனர் திரு ஷேகர் குப்தா தெரிவித்தார்.

திரு மம்தானியை இந்து எதிர்ப்பாளர் என்றும் அவமானச் சின்னம் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சு வர்மா டுவிட்டரில் பதிவிட்டார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டப்படுவதை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரு மம்தானி கலந்துகொண்டதைக் காட்டும் காணொளியை எக்ஸ் தளத்தில், இந்தித் திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் பதிவேற்றம் செய்தார்.

இந்து சமயத்தை அழிக்க திரு மம்தானி முற்படுவதாக அவர் சாடினார்.

குறிப்புச் சொற்கள்