பாரிஸ்: இவ்வாரம் செவ்வாய்க்கிழமையே உலகின் ஆக வெப்பமான நாளாகப் பதிவானது. சராசரி வெப்பநிலை முதன்முறையாக 17 டிகிரி செல்சியசைத் தாண்டியதாக அமெரிக்க வானிலை ஆய்வகத்தின் முதற்கட்ட அளவீடுகள் காட்டின.
அமெரிக்க தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகத்தின் சுற்றுப்புற முன்னுரைப்புகளுக்கான தேசிய நிலையங்கள் (என்ஓஏஏ) புவியின் மேற்பரப்பில் அன்றாட சராசரி வெப்பநிலை செவ்வாய்க்கிழமையன்று 17.01 டிகிரி செல்சியசைத் தாண்டியதாகத் தெரிவித்தன.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதியன்று ஆக அதிகமாக 16.92 டிகிரி செல்சியஸ் எனப் பதிவானது.
ஆண்டில் எந்தவொரு நாளிலும் உலகச் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 12 டிகிரி செல்சியஸ் முதல் 17 டிகிரி செல்சியசுக்குக் கீழ்தான் இருக்கும். 1979ஆம் ஆண்டுக்கும் 2000ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜூலை மாதத் தொடக்கத்தில் வெப்பநிலை சராசரியாக 16.2 டிகிரி செல்சியஸ் எனப் பதிவானது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ வானிலை நிகழ்வு காரணமாக வரலாற்றில் இதுவரை பதிவாகாத சராசரி அளவுகளைத் தாண்டி அடுத்த ஆண்டு வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

