கோலாலம்பூர்: மலேசியாவின் பங்சார் பகுதியில் நடந்த சண்டையில் ஆடவர் ஒருவரைக் கொன்றதற்காக, நாணய மாற்று வியாபாரியான சையது கமல் சையது முகம்மது, 28, மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
சஞ்சீத் குமார், 28, என்பவரை 2021ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி காலை 1 மணியளவில் வங்கிக்குப் பின்னால், சையது மேலும் நால்வருடன் சேர்ந்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கு மீண்டும் ஜூன் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி, ஜி.நரேஷ், 27, கே.பிரவின், 28, எஸ். லட்சுமணன், 30, ஆகிய மூவர் மீதும் சஞ்சீத் குமார் கொலை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டது.
நான்காவது நபர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொலைக் குற்றச்சாட்டு நிரூபணமானால் குறைந்தது 30 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.