மலேசியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மக்களிடமே திருப்பிக் கொடுக்கப்படும்: அன்வார்

மலேசியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மக்களிடமே திருப்பிக் கொடுக்கப்படும்: அன்வார்

2 mins read
f01ca2fc-2a91-46e4-a925-9e23ee661919
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

புத்ராஜெயா: மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கையையும் நலன்களையும் நேரடியாகப் பாதிக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.

பிற்பகல் 3 மணியளவில் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள தேசிய தின உரை நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்படும். இது குறித்துத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் கவலைகளையும் அன்றாட வாழ்க்கையையும் தொட்டுச் செல்லும் பல முக்கியத் திட்டங்களை இந்த உரையின்போது அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டை முன்னோக்கிச் செல்லும் பாதையில் கொண்டுசெல்வதில் இன்றைய தலைமுறையினரின் பொறுப்புகளைச் சிந்தித்துப் பார்க்கும் அதே வேளையில், நாட்டின் முந்தைய தலைமுறையினரின் தியாகங்களுக்கு மலேசியர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் அமைதியையும் செழிப்பையும் பாதுகாக்கும் வகையில், இன மற்றும் சமயத் தீவிரவாதத்தைப் புறக்கணிக்குமாறு அவர் மலேசியர்களை வலியுறுத்தினார்.

“மலேசியாவின் சுதந்திரத்துக்கு வழியமைத்துத் தந்த முந்தைய தலைமுறையினரின் வியர்வை, ரத்தம் மற்றும் கண்ணீராலான போராட்டங்களையும் தியாகங்களையும் நினைவுகூர வேண்டும். அதன்பின்னரே, இன்றைய தலைமுறையினர் நாட்டின் சுதந்திரத்தைப் பேணிக் காத்து, அதற்கு முழுமையான அர்த்தத்தை அளிக்கும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட முடியும். நாட்டின் அமைதிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் ஒற்றுமை உணர்வை மீண்டும் புதுப்பித்து, இன, சமய வெறுப்பைத் தூண்டும் அனைத்துச் செயல்களையும் புறக்கணித்து இந்த ஆண்டின் தேசிய தினக் கொண்டாட்டங்களைச் சிறப்பிப்போம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், முறையற்ற வகையில், தவறான பயன்பாடுகள் மூலம் வீணடிக்கப்பட்ட பில்லியன் கணக்கிலான ரிங்கிட் நிதி மீட்கப்பட்டு, அது மலேசிய மக்களுக்கே மீண்டும் திருப்பிக் கொடுக்கப்படும் என்று பிரதமர் அன்வார் சூளுரைத்துள்ளார். சாதாரண மக்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான உதவிகளே கிடைக்கும் நிலையில், பெருந்தொகையான பொதுப் பணம் காணாமல் போவதை அரசாங்கத்தால் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் வாதிட்டார். விசாரணைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றாலும், பொது நிதி வீணடிக்கப்படுவதற்கு அல்லது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று திரு அன்வார் கூறியதாக ‘சினார் ஹரியான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்தேசிய தினம்நிதி