உலான்பாதர்: எதிர்க்கட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பதவி நீக்க அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, மங்கோலிய அதிபர் உக்னா குரேல்சுக் தமது பதவி விலகலை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) அறிவித்தார்.
அவர் மீது ஊழல் குற்றம் சாட்டிய ஜனநாயகக் கட்சி, பதவி விலக வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட மறுநாளே அதிபரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் குரேல்சுக், கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகத் தம் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவதூறு பரப்பப்படுவதாகவும் தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க பதவி விலகுவதாகவும் கூறினார்.
“அரசாங்கத்தின் தலைவர் தமது பதவிப்பொறுப்பிலிருந்து விலகி, உண்மையை நிலைநாட்டுவது நீதியின் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
“எனவே, அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தவர்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்து, எனது நற்பெயரை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பேன்,” என்றும் திரு குரேல்சுக் தெரிவித்தார்.
