மலேசிய சலுகை விலைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கக் கண்காணிப்பு

மலேசிய சலுகை விலைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கக் கண்காணிப்பு

1 mins read
c2a47d21-4ff3-4605-8980-80ff55723782
மலேசியாவின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வாரியம் (AKPS) அண்மையில் சோதனைகள் நடத்தத் தொடங்கி இருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சு அதிகாரி கூறியுள்ளார். - படம்: த ஸ்டார்

ஜோகூர் பாரு: மலேசியர்களுக்குச் சலுகை விலையில் விற்கப்படும் பொருள்களை வாங்கி சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்லும் செயல் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தடுத்து நிறுத்த மலேசிய அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளதாக த ஸ்டார் இணையச் செய்தி தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்குள் தரைவழியாக நுழையும் முனைகளில் அமலாக்க அதிகாரிகள் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறியது.

அதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்த மலேசியாவின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வாரியம் (AKPS) அண்மையில் சோதனைகள் நடத்தத் தொடங்கி இருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“உள்ளூர் மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய், சர்க்கரை, மாவு, அரிசி போன்றவை உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதை மலேசியா விரும்பவில்லை,” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவும் வேளையில் அதிகமான சிங்கப்பூரர்கள், மானிய விலையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிப் பதுக்கி வைக்க ஜோகூருக்கு வரக்கூடும் என்ற அக்கறை எழுந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்பாக, நள்ளிரவுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசல் இல்லாத வேளைகளில் அதிக எண்ணிக்கையிலான சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஜோகூருக்கு வருகிறார்களா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்