கொழும்பு: இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொடங்கிய மின்தடை, மூன்று மணி நேரத்துக்குப் பிறகும் முழுமையாகச் சரிசெய்யப்படவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தித்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி, “மின்மாற்றியுடன் குரங்கு ஒன்று தொடர்பில் வந்ததால் கட்டமைப்பில் சமநிலையின்மை ஏற்பட்டது,” என்றார்.
தென்கொழும்பு புறநகர்ப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
சில பகுதிகளில் மின்விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பினாலும் மின்தடை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
“கூடிய விரைவில் மின்விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவர பொறியாளர்கள் முழுமூச்சாகப் பணியாற்றி வருகின்றனர்,” என்றார் அமைச்சர்.