கோலாலம்பூர்: ‘எம்பாக்ஸ்’ எனப்படும் குரங்கம்மை தொற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் வருகிறது என்று மலேசிய சுகாதார அமைச்சர் சூல்கிஃப்லி அஹமட் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 ஆசியான் நிதியுதவி மூலம் தடுப்பூசிகள் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
‘டெகோவிரிமேட் ஆன்டிவைரல்’ (Tecovirimat Antiviral: TPOXX), எம்விஏ-பிஎன் (MVA-BN) ஆகிய குரங்கம்மைக்கான தடுப்பூசிகள் தருவிக்கப்படுகிறது என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்ட எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எம்பாக்சுக்கு சிகிச்சையளிக்க ‘டிபிஓஎக்ஸ்எக்ஸ்’ பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கடுமையான தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது என்று சூல்கிஃப்லி மேலும் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க் கிழமை இந்தோனீசிய சுகாதார அமைச்சர் புடி குனாடி சாடிக்கனும் குரங்கம்மைத் தொற்று நோயைத் தடுக்க டென்மார்க்கிலிருந்து ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் தருவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
உலக சுகாதார நிறுவனம், குரங்கம்மைத் தொற்று நோய் விரைவில் பரவி வருவதாக அறிவித்திருந்தது.
நெருங்கிய தொடர்பு மூலம் இந்நோய் பரவுகிறது.
டாக்டர் சூல்கிஃப்லி முன்னதாக கோலாலாம்பூர் விமான நிலையம் முனையம் 1ல் நோய்ப் பரவலைத் தடுக்க பயணிகளுக்கு மருத்துவ சோதனைகளை கடுமையாக்குவது பற்றி மலேசிய விமான நிலையங்கள் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து சாத்தியமான பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மலேசிய தேசிய நெருக்கடி ஆயத்தநிலை மற்றும் பதில் நடவடிக்கை நிலையத்தில் சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டன.