தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நம் நுழைவாயிலில் ஓர் அரக்கன்’: புட்டினுக்கு ஐரோப்பாவின் முத்திரை

2 mins read
9b89e3de-3e96-4d19-8010-d6fdcd5a14e6
புட்டின்-ஸெலென்ஸ்கி சந்திப்பு நடைபெறும் என்ற நம்பிக்கை, தேய்ந்து வருவதாகப் பிரஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் குறிப்பிட்டார்.   - படம்: ராய்ட்டர்ஸ்

டுலோன்: மூன்றரை ஆண்டுகளாக நீடித்துள்ள உக்ரேனிய போரின் தொடர்பில்  பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோனும் ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிட்ஜ் மெர்சும், ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க உறுதிபூண்டுள்ளனர். 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், போரை முடிவுக்குக் கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை என்றும் அந்தத் தலைவர்கள் சாடியுள்ளனர்.

திரு புட்டின், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்திப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், அது அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பை ஏமாற்றும் செயலாகும் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் இடித்துரைத்தார்

இக்கருத்தை ஆதரித்த ஜெர்மானியப் பிரதமர் மெர்ஸ், திரு புட்டின் அத்தகைய சந்திப்பு ஒன்றை நடத்த விரும்பவில்லை என்றும் போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்றும் கூறினார்.

பிரான்சும் ஜெர்மனியும் உக்ரேனுக்குக் கூடுதல் ஆகாயப் பாதுகாப்பு சாதனங்களை அனுப்பவும், அணுசக்தி தடுப்பு குறித்து உத்திபூர்வப் பங்காளித்துவம் ஒன்றைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டன.

புட்டின்-ஸெலென்ஸ்கி சந்திப்பு நடைபெறும் என்ற நம்பிக்கை, தேய்ந்து வருவதாகத் திரு மெக்ரோன் குறிப்பிட்டார்.  “அந்த சந்திப்பு நடைபெறும் என்று நான் நம்புகிறேன், ஆனால் அவ்வாறு நடக்காமல் போனால், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து அதை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைப்போம்,” என்று திரு மெக்ரோன் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் திரு. புட்டினை “நம் வாயிலில் ஓர் அரக்கன்” என்று வர்ணித்த திரு மெக்ரோன், தாம் பேசியது குறித்து எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. திரு மெக்ரோனின் கூற்று, மாஸ்கோவைக் கோபப்படுத்தியுள்ளது.

“திரு புட்டின் சர்வாதிகாரப் பாதையில் செல்கிறார். அனைத்துலக  எல்லைகளை மாற்றி பேரரசைத் திணிக்கவும் முடிவு செய்துள்ளார்.” என்று திரு மக்ரோன் கூறினார். 

ஆகஸ்ட் 28ல் கீவ் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு பதற்றநிலை அதிகரித்துள்ளது. 

அனைத்துலகப் பேச்சுவார்த்தைகளில் திரு புட்டின் சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று என்றும் சுட்டிய திரு மெக்ரோன், அவரை நேர்மையற்றவர் என்றும் கடிந்தார்.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்று திரு. மெர்ஸ் கூறினார், மேலும் ஒரு விரைவான முடிவுக்கு வாய்ப்புகள் குறித்து தமக்கும் எந்த மதிமயக்கமும் இல்லை என்றும் கூறினார்.

“ இருந்தபோதும் நாங்கள் உக்ரெய்னைக் கைவிட மாட்டோம்” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்