திருமண விழாவில் தீ; 100 பேர் உயிரிழப்பு

திருமண விழாவில் தீ; 100 பேர் உயிரிழப்பு

1 mins read
197366de-b850-4327-a7f7-6d7fcb3e4ca0
தகவல் கிடைத்ததும் மருத்துவக் குழுக்களும் அவசர மருத்துவ உதவி வாகனங்களும் நிகழ்விடத்திற்கு விரைந்தன. - படம்: ஏஎஃப்பி

பாக்தாத்: ஈராக்கில் நினவா நகரில் நடந்த ஒரு திருமண விழாவின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு நடந்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

மேலும், சம்பவத்தின்போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்குக் கூடியிருந்ததாகவும் அவர்கள் சொன்னார்கள்.

இந்தத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 113 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நினவாவின் துணை ஆளுநர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் மண்டபத்தின் எரிந்த பகுதிகளின்மீது ஏறிச் செல்வதையும் அவர்கள் உயிருடன் யாரேனும் இருக்கின்றனரா என இடிபாடுகளின்மீது விளக்குகளை ஒளிரவிட்டு தேடுவதையும் சம்பவ இடத்திலிருந்து ராய்ட்டர்ஸ் பகிர்ந்த காணொளியில் காண முடிந்தது.

நினவா பகுதியில் உள்ள அம்தானியா மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெரிய மண்டபத்தில் திருமணக் கொண்டாட்டம் நடந்தது என்றும் வாணவேடிக்கைகள் கொளுத்தப்பட்டபோது அதிலிருந்து வந்த தீ மளமளவென மண்டபம் முழுவதும் பரவியது என்றும் அந்நாட்டுக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாக அரசாங்க ஊடகம் கூறியது.

திருமண மண்டபம் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் இதுவே மொத்த மண்டபமும் தீக்கிரையாகக் காரணம் என்றும் அது குறிப்பிட்டது.

மருத்துவக் குழுக்களும் அவசர மருத்துவ உதவி வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்