ஜகார்த்தா: சுமத்ரா தீவு அருகே வெள்ளிக்கிழமை (மே 23) ரிக்டர் அளவில் 5.7 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன.
உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.52 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3.52 மணி) பெங்குலு மாநிலம் அருகே 68 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக நிலையம் தெரிவித்தது.
இந்தோனீசியாவின் வானிலை ஆய்வு நிலையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவானதாகவும் 84 கிலோமீட்டர் ஆழத்தில் அது மையம் கொண்டதாகவும் தெரிவித்தது. சுனாமி ஏற்படும் சாத்தியம் இல்லை என்று அது கூறியது.
மாநிலத் தலைநகர் பெங்குலு நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் குறைந்தது ஆறு பொது இடங்களும் நிலநடுக்கத்தால் சேதமுற்றதாக தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுப் பேச்சாளர் அப்துல் முஹாரி கூறினார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “பெங்குலு நகரில் 140 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததால் அவற்றைச் சரிசெய்ய இயலாது,” என்றார்.
மத்திய பெங்குலு மாவட்டத்தில் இரு வீடுகள் லேசாக சேதமுற்றதாக அவர் கூறினார். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று திரு அப்துல் கூறினார்.