ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய அதிபராக அக்டோபர் மாதம் 20ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்ட பிரபோவோ சுபியாந்தோ, தமது அமைச்சரவையை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
48 அமைச்சுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.
தமது அமைச்சரவையை அதிபர் பிரபோவோ சிவப்பு, வெள்ளை அமைச்சரவை என வர்ணித்துள்ளார்.
இந்தோனீசியாவின் வெளியுறவு அமைச்சராக சுகியோனோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தோனீசிய ராணுவத்தின் சிறப்புப் படையின் முன்னாள் உறுப்பினரும் அதிபர் பிரபோவோவின் கெரின்டா கட்சியின் துணைத் தலைவரும் ஆவார்.
முதலீட்டு அமைச்சராக ரோசான் பெர்காசா ரோஸ்லானி தொடர்கிறார்.
இந்தோனீசியாவின் நிதி அமைச்சராக ஸ்ரீ முல்யாணி இந்திராவதியும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர்களாக எரிக் தொஹிரும் தொடர்கின்றனர்.
தற்காப்பு அமைச்சராக ஸ்ஜாஃப்ரி ஸ்னாம்சோதீன் பதவி ஏற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை அமைச்சராக டிட்டோ கார்னாவியான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 25ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை தமது அமைச்சர்களை மூன்று நாள் ஓய்வுத்தளத்துக்கு திரு பிரபோவோ அழைத்துச் செல்கிறார்.
இது ஜாவாவில் உள்ள மலைப்பகுதியில் இருக்கும் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடைபெறும்.
அங்கு அமைச்சர்கள் கூடாரங்களில் படுத்து உறங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தளம் மத்திய ஜாவாவில் உள்ளது. தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து ஏறத்தாழ 500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இத்தளத்தைச் சுற்றி பல எரிமலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.