மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் விடுவிப்பு

மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் விடுவிப்பு

1 mins read
10078480-be86-453c-9813-3c5341e90903
கோலாலம்பூரில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்பு காவல்துறையினரால் லாரியில் அழைத்துச் செல்லப்பட்ட ரோஹிங்யா அகதிகள். - படம்: ராய்ட்டர்ஸ்

மலேசியத் தடுப்பு முகாம்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகளை அந்நாட்டு அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

அவர்கள் நாடு முழுதும் கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் காவல் துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை (ஜூலை 29) தெரிவித்தார்.

உதவி கோரி கோலாலம்பூரில் உள்ள ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பின் அலுவலகத்திற்கு வெளியே திங்கட்கிழமை திரண்டதைத் தொடர்ந்து, அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பினாங்கு மாநிலத்தில் உள்ள தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அகதிகள் தெரிவித்தனர்.

ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் 109 ரோஹிங்யா அகதிகள் கோலாலம்பூர் காவல்துறைத் தலைமையகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபடில் மர்சுஸ் அறிக்கையொன்றில் அதனைத் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா, ஐக்கிய நாட்டு அகதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அத்துடன் புகலிடம் நாடுவோரைச் சட்டவிரோதக் குடியேறிகளாகவே அது கருதுகிறது. இருப்பினும் பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மியன்மாரில் நடக்கும் அடக்குமுறைகளிலிருந்து தப்பிவரும் ரோஹிங்யாக்களுக்கு மலேசியா பாதுகாப்பான புகலிடமாகப் பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பு உள்நாட்டில் இயங்க அனுமதிப்பதா வேண்டாமா என்பதை நாடு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகள் அண்மை மாதங்களில் அதிக அளவில் துன்புறுத்தல்களுக்கும் கடுமையான ஆய்வுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகோலாலம்பூர்ரோஹிங்யாஅகதிவிடுவிப்பு