சோல்: 2025ஆம் ஆண்டின் இறுதியில் தென்கொரியாவில் 108,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெளிநாட்டினருக்குச் சொந்தமானவையாக இருந்தன. இதில், வெளிநாட்டினருக்குச் சொந்தமான மொத்த சொத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை சீனாவுக்குச் சொந்தமானவை என மே 29ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
நாட்டின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2025 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, தென்கொரியாவில் வெளிநாட்டினருக்குச் சொந்தமான 108,231 வீடுகள் இருந்தன. இது முந்தைய ஆண்டில் 100,216 ஆக இருந்ததை விட எட்டு விழுக்காடு அதிகம்.
தென்கொரியாவின் மொத்த வீடுகளில், வெளிநாட்டினருக்குச் சொந்தமானவை 0.55 விழுக்காடு.
சீன நாட்டவர்களே மிகப்பெரிய பங்கிற்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். அவர்கள் 61,000 வீடுகளை வைத்துள்ளனர். இது வெளிநாட்டினருக்குச் சொந்தமான மொத்த சொத்துகளில் 56.7 விழுக்காடு.
அவர்களைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் கிட்டத்தட்ட 23,000 வீடுகளையும், கனடியர்கள் 6,500 வீடுகளையும், தைவானியர்கள் 3,400 வீடுகளையும், வியட்னாமியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட 2,000 வீடுகளையும் வைத்திருந்தனர்.
தென்கொரியாவில் நீண்டகாலமாக வசிக்கும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கர்கள் 27.4 விழுக்காட்டுடன் அதிகபட்ச வீட்டு உரிமையாளர் விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சின் தரவுகள் காட்டின. அவர்களைத் தொடர்ந்து கனடியர்கள் 24.3 விழுக்காடும் ஆஸ்திரேலியர்கள் 22.2 விழுக்காடும் தைவானியர்கள் 17.8 விழுக்காடும் சீன நாட்டவர்கள் 7.5 விழுக்காடும் பெற்றிருந்தனர்.
கியோங்கி மாநிலத்தில் வெளிநாட்டினருக்குச் சொந்தமான வீடுகள் அதிக அளவில் குவிந்திருந்தன. அங்கு மட்டும் 42,386 வீடுகள் இருந்தன. இது மொத்தத்தில் 39.2 விழுக்காடாகும்.
தலைநகர் சோல் 24,541 வீடுகளுடனும் இன்சியோன் 11,279 வீடுகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, கியோங்கி மாநிலத்தில் உள்ள புச்சியோன், அன்சான், சுவோன், சிஹியுங், பியோங்டேக், இன்சியோனில் உள்ள புப்யோங் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வெளிநாட்டினரின் உரிமை குவிந்திருந்தது.
இதைத் தவிர்த்து, 2025ஆம் ஆண்டு இறுதியில் தென் கொரியாவில் வெளிநாட்டினர் 270.2 மில்லியன் சதுர மீட்டர் நிலத்தை வைத்திருந்தனர். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 0.27 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

