கராக்கஸ்: வெனிசுவேலாவில் 1,557 அரசியல் கைதிகள் பொதுமன்னிப்புக் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். வியாழக்கிழமை (பிப்ரவரி 19) அறிமுகம் கண்ட சட்டத்தின்கீழ் அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்றத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிகஸ் கூறியுள்ளார்.
வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகசின் சகோதரரான அவர், ஏற்கெனவே நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவர்களுள் ஒருவரான வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் யுவான் பாப்லோ குவானிப்பா, புதிய சட்டத்தைக் குறைகூறினார். அந்தச் சட்டத்தின்கீழ் கைதிகள் சிலரை விடுவிக்க முடியாமல் போனதை அவர் சுட்டினார்.
வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் நிக்கலஸ் மடூரோவையும் அவரின் மனைவியையும் அமெரிக்கா சென்ற மாதம் (ஜனவரி) 3ஆம் தேதி கைதுசெய்தது. அவரும் அவர் மனைவியும் அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதன் பிறகு, அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை முடுக்கிவிடுமாறு வாஷிங்டன் வெனிசுவேலாவுக்கு நெருக்குதல் கொடுத்தது. அரசியல் கைதிகளைத் தடுத்துவைத்திருக்கவில்லை என்று வெனிசுவேலாவின் சோஷலிசக் கட்சி கூறிவந்திருக்கிறது.
சனிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜோர்ஜ் ரோட்ரிகஸ், புதிய சட்டத்தின்கீழ் 11,000 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று சொன்னார்.
மடூரோவின் கைதுக்குப் பிறகு, நல்லெண்ண அடிப்படையில் கணிசமான எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் முதலில் அறிவித்தது.
கருத்து வேறுபாடுகளை வேரறுப்பதற்காக மடூரோ அரசாங்கம் பல்லாண்டாக அரசியல் கைதிகளைத் தடுப்புக்காவலில் வைத்திருந்ததாக எதிர்த்தரப்பினரும் மனித உரிமைக் குழுவினரும் இதற்கு முன்னர் குறைகூறியிருந்தனர்.
பொதுமன்னிப்பு, சென்ற ஆண்டு (2025) நொபெல் பரிசு வென்ற திருவாட்டி மரியா கொரினா மச்சாடோவுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மடூரோ அமெரிக்காவில் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள போதைப்பொருள், ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தாம் ஒரு போர்க்கைதி என்றார் அவர்.

