‘ரான்சம்வேர்’ தாக்குதல்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ள 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள்

‘ரான்சம்வேர்’ தாக்குதல்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ள 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள்

1 mins read
c1c45b0f-1454-41c0-915b-2e49e62b7bcd
ஜப்பான் மின்னிலக்கப் பொருளியல் மற்றும் சமூக மேம்பாட்டுக் கழகம் ஜனவரி மாதம் நடத்திய ஆய்வில் பதிலளித்த 1,107 நிறுவனங்களில், 507 நிறுவனங்கள் ரான்சம்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய ஆய்வின்படி, குறைந்தபட்சம் 222 ஜப்பானிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் ரான்சம்வேர் தாக்குதல்காரர்களுக்குப் பணம் செலுத்தியுள்ளன. ஆனாலும் அவர்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் தங்களது தரவுகளை மீட்டெடுக்கத் தவறிவிட்டனர்.

ஜப்பான் மின்னிலக்கப் பொருளியல் மற்றும் சமூக மேம்பாட்டுக் கழகம் ஜனவரி மாதம் நடத்திய ஆய்வில் பதிலளித்த 1,107 நிறுவனங்களில், 507 நிறுவனங்கள் ரான்சம்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில், இணைய ஊடுருவியலாளர்கள் தரவுகளை அணுகுவதைத் தடுத்து, அதை மீட்டெடுக்கப் பணம் கோருவார்கள்.

தாக்குதல்காரர்களுக்குப் பணம் செலுத்திய நிறுவனங்களில், 83 நிறுவனங்களால் தங்கள் கணினி அமைப்புகளையும் தரவுகளையும் மீட்டெடுக்க முடிந்தது. அதே வேளையில் 139 நிறுவனங்களால் மீட்டெடுக்க முடியவில்லை. இதற்கு மாறாக, 141 நிறுவனங்கள் தாங்கள் ரான்சம்வேர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட போதிலும், பணம் செலுத்தாமலேயே தங்கள் அமைப்புகளையும் தரவுகளையும் மீட்டெடுக்க முடிந்ததாகத் தெரிவித்துள்ளன.

இது குற்றவியல் அமைப்புகளுக்கு நிதியளிப்பதாக அமைவதால் மீட்கும் தொகையை செலுத்தக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “மீட்கும் தொகையைச் செலுத்துவது தரவு மீட்புக்கு உத்தரவாதம் அளிக்காது” என்ற யதார்த்தத்தை இந்த ஆய்வின் முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் கழகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்