நோம் பென்: 2025ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய அண்டை நாடுகளான கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே மூண்ட இரண்டு பிரிவு சண்டைகளைத் தொடர்ந்து, தாய்லாந்துடனான கம்போடியாவின் எல்லைப் பகுதியில் 20,000க்கும் மேற்பட்ட கம்போடியர்கள் இன்னும் வீடுகளை இழந்த நிலையிலேயே உள்ளனர்.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு நேரில் சென்ற பிறகு வெள்ளிக்கிழமை (ஜூலை 31) ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) நிபுணர் ஒருவர் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
மேலும், கம்போடியாவின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் இயங்கிவரும் இணைய மோசடி நிலையங்கள்மீது அந்நாட்டு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கம்போடிய மனித உரிமைகள் தொடர்பான ஐநா சிறப்புப் பிரதிநிதி டாம் ஆண்ட்ரூஸ் கேட்டுக்கொண்டார்.
2025ஆம் ஆண்டின் இறுதியில் வீடுகளை இழந்த நிலையில் எல்லைப் பகுதிகளில் இருந்த கிட்டத்தட்ட 650,000 கம்போடியர்களில், 20,000க்கும் மேற்பட்டோரால் இன்னமும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை.
சில நகரங்களும் கிராமங்களும் தாய்லாந்துப் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளதே அதற்குக் காரணம் என்று திரு ஆண்ட்ரூஸ் கூறினார்.
“ஆயுதமேந்திய மோதல்களால் வீடுகளை இழந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு உரிமை உண்டு என்பது அனைத்துலகச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு விஷயமாகும்,” என்றும் அவர் சொன்னார்.

