கோலாலம்பூர்: மலேசியாவில் 2019ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்தம் 21,114 பதின்மவயதினர் திருமணமாகாமல் கர்ப்பம் தரித்ததாக அந்நாட்டின் மகளிர், குடும்ப நலன், சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
இந்தத் தகவல் அரசாங்க சுகாதார நிலையங்களின் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள தமது அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகளில் இனப்பெருக்கம் தொடர்பான சுகாதாரக் கல்வியை வலுப்படுத்துவது, ஆலோசனைத் திட்டங்கள், சமூக ஆதரவு ஆகியவை அடங்கும் என்று அமைச்சர் நேன்சி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதலளித்தார்.
2019ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் பதின்மவயதினருடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ரந்தாவ் பஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தி ஸைலா முகம்மது யூசோஃப் கேள்வி எழுப்பியிருந்தார்.
திருமணம் ஆகாமல் கர்ப்பமான பதின்மவயதினர் பற்றியும் அவர் கேள்வி கேட்டார்.
வயது, பாலினம், இனம் வாரியாகப் புள்ளிவிவரங்களை வெளியிடும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
செயல் திட்டத்தின்கீழ், அதிகாரபூர்வத் திட்டம் மற்றும் பள்ளிச் சூழலுக்கு வெளியே வழங்கப்படும் திட்டங்களிலும் பாதுகாப்பான இனப்பெருக்க சுகாதாரத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றார் அமைச்சர் நேன்சி.
தமது அமைச்சின் மூலம் புதிய தேசியக் குடும்பக் கொள்கை மற்றும் தேசியக் குடும்பச் செயல் திட்டம் ஆகியவற்றை மலேசிய அரசாங்கம் தொடங்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதும் இவற்றின் இலக்கு.
பதின்மவயதினர் திருமணமாகாமல் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கவும் இளம் தலைமுறையினரின் நலனையும் எதிர்காலத்தையும் காக்கவும் சமூக அளவிலான முயற்சிகள் அவசியம் என்று அமைச்சர் நேன்சி வலியுறுத்தினார்.

