மலேசியத் தடுப்புக்காவல் மையங்களில் 22,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள்

மலேசியத் தடுப்புக்காவல் மையங்களில் 22,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குடியேறிகள்

1 mins read
1b45281e-3da2-47da-b3d8-53d5937703e6
தடுப்புக் காவலில் உள்ளவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் (17,872 பேர் அல்லது 81%). எஞ்சியோர் பெண்கள் (4,294 பேர் அல்லது 19%). - படம்: மலேசியா உள்துறை அமைச்சு

பெட்டாலிங் ஜெயா: மலேசியா முழுவதும் உள்ள 20 குடிநுழைவுத் தடுப்புக்காவல் மையங்களில் ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி 22,166 சட்டவிரோதக் குடியேறிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நாட்டின் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

2025 ஜூலை 6ஆம் தேதி நிலவரப்படி தடுப்புக் காவலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 17,896ஆக இருந்த நிலையில், தற்போதைய எண்ணிக்கை கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளது.

தடுப்புக் காவலில் உள்ளவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் (17,872 பேர் அல்லது 81%). எஞ்சியோர் பெண்கள் (4,294 பேர் அல்லது 19%).

மியன்மார் நாட்டவரே அதிக எண்ணிக்கையில் (11,194 பேர்) உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸ் (5,200), இந்தோனீசியா (3,247), பங்ளாதேஷ் (1,133), தாய்லாந்து (277), இந்தியா (250), பாகிஸ்தான் (193), சீனா (174), வியட்னாம் (85), நேப்பாளம் (76), கம்போடியா (49) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 11,884 பேர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கும் 5,035 பேர் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரையிலும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், எட்டுப் பேர் ஆறு முதல் 10 ஆண்டுகளாகவும் ஒருவர் குறைந்தது 11 ஆண்டுகளாகவும் தொடர் காவலில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, சட்டவிரோதக் குடியேறிகளின் குழந்தைகள் மற்றும் பராமரிப்பாளர்கள் என 356 பேர் நாடு முழுவதும் உள்ள ஏழு பராமரிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் அமைச்சர் சைஃபுதீன் விளக்கமளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாதடுப்புக் காவல்சட்டவிரோதம்குடியேறிகள்