ஜோகூரில் வெளிநாட்டினர் நடத்தும் 300க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் அடையாளம்

ஜோகூரில் வெளிநாட்டினர் நடத்தும் 300க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் அடையாளம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 7:58 pm

2 mins read

இஸ்கந்தர் புத்ரி: மலேசியாவின் ஜோகூர் மாநிலம் முழுவதும் வெளிநாட்டினரால் நடத்தப்படும் வர்த்தகங்கள் அதிக அளவில் குவிந்துள்ள 290க்கும் மேற்பட்ட முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மது ஜஃப்னி முகம்மது ஷுகோர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள 16 உள்ளூராட்சி மன்றங்களும் கண்காணிப்பு, சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காக அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கும் திட்டம் குறித்து டிசம்பர் மாதத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று வீடமைப்பு, உள்ளூராட்சித் துறைக் குழுத் தலைவரான அவர் கூறினார்.

“வெளிநாட்டு ஊழியர்கள், ஆவணமற்ற குடியேறிகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள், குடிநுழைவுத் துறை, காவல்துறை மற்றும் ஊழியர் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழுவின் அண்மையக் கூட்டத்தின்போது அந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் மாநகராட்சி அதிகார வரம்பிற்குட்பட்ட 90 இடங்களும் நகராட்சி அதிகார வரம்பிற்குட்பட்ட 140 இடங்களும் அடங்கும்,” என்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஜோகூரில் நடைபெற்ற மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டினர் பெரும்பாலும் மளிகைக் கடைகளையும் உணவகங்களையும் நடத்தி வருவதாகவும் தொழிற்பேட்டைப் பகுதிகளில் உள்ள தங்குவிடுதிகளில் அவர்கள் வசித்து வருவதாகவும் திரு ஜஃப்னி கூறினார்.

சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தவும், குறிப்பாக மலேசியர்கள் தங்களது உரிமங்களை வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடுவதன்மூலம் வர்த்தக உரிமங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் அடுத்த ஆண்டுமுதல் பல கூடுதல் உரிம நிபந்தனைகளைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“காசாளர்களாக மலேசியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதும் வர்த்தக உரிமங்களுக்கு விண்ணப்பிக்கும்போது வர்த்தக உரிமையாளர்கள் சரிபார்ப்பிற்காகச் செல்லுபடியாகும் வேலை அனுமதிச்சீட்டுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் இந்தப் பரிந்துரைகளில் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்