தேர்தலுக்காக 300,000க்கும் அதிகமானோர் ஜோகூருக்குச் செல்வர் என எதிர்பார்ப்பு

தேர்தலுக்காக 300,000க்கும் அதிகமானோர் ஜோகூருக்குச் செல்வர் என எதிர்பார்ப்பு

2 mins read
ஜோகூருக்குள் செல்பவர்கள் அல்லது அவ்வழியாகப் பயணம் மேற்கொள்பவர்கள், முக்கியப் பாதைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவேண்டும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் வலியுறுத்து
e8aca06b-10d7-4571-8e08-4437e5db120b
ஜோகூரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் சாலைத் தடங்கள் மூடப்படும் பணிகள் சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்தது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சனிக்கிழமை (ஜூலை 11) 300,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அங்குப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தயாராகிவருகிறது.

ஜோகூருக்குள் செல்பவர்கள் அல்லது அவ்வழியாகப் பயணம் மேற்கொள்பவர்கள், முக்கியப் பாதைகளில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவேண்டும் என்று நெடுஞ்சாலை வாரியத் தலைவர் ஹஸ்னி முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் பயணம் செய்வதை உறுதிசெய்வதற்காக, வாக்களிப்பு நாளன்று நெடுஞ்சாலைகளில் சாலைத் தடங்கள் மூடப்படும் பணிகள் ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வாகனவோட்டிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட ‘துஜு’ (TuJu) செயலியைப் பயன்படுத்துமாறும் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்யுமாறும், தங்களின் ‘டச் அண்ட் கோ’ (Touch ‘n Go) கணக்குகள், மின்-பணப்பைகள், கடன்பற்று அட்டைகள் ஆகியவற்றில் போதிய பணம் இருப்பதைச் சரிபார்த்துக்கொள்ளுமாறும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் வலியுறுத்துகிறது,” என்றார் திரு ஹஸ்னி.

அதோடு, நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனவோட்டிகள் வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், கவனமாக வாகனங்களை ஓட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

போக்குவரத்து நிலவரம், நெடுஞ்சாலைச் சம்பவங்கள் குறித்த தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, வாரியத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம், ‘@llmtrafik’ என்ற டிக்டாக் கணக்கு அல்லது 1-800-88-7752 என்ற எண்ணில் அதன் போக்குவரத்து மேலாண்மை நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், கண்காணிப்புக் கருவிகள் மூலம் நெடுஞ்சாலையின் நேரடிப் போக்குவரத்து நிலவரத்தை www.llm.gov.my எனும் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் காணலாம் அல்லது ‘LLM Info Trafik’ வாட்ஸ்அப் ஒளிவழி மூலமும் பொதுமக்கள் அதனைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், 16வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குப்பதிவு பாவனை நடவடிக்கை, ஜாலான் யாம் துவானில் உள்ள சிரம்பான் நகர மன்ற மண்டபத்தில் வியாழக்கிழமை (ஜூலை 9), வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெறவுள்ளது.

அதனை முன்னிட்டு, சிரம்பான் நகர நிலையத்தில் உள்ள சில முக்கியச் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்தேர்தல்போக்குவரத்து