ஜோகூர் பாரு: இஸ்கந்தர் புத்ரி நகரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனைகளில், 330க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர். மோசடிகளுடன் தொடர்புடைய சட்டவிரோத அழைப்பு நிலையங்கள் இரண்டில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தில் அவர்கள் பிடிபட்டனர். பிடிபட்டோரில் 194 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறையற்ற அழைப்பு நிலையங்களை ஒடுக்கும் நோக்கத்துடன் நாடு தழுவிய நிலையில் சோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக அண்மைச் சோதனைகள் அமைந்தன. கடந்த சில நாள்களில் பல சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் பங்களாக்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான், இந்தோனீசியா ஆகியவற்றில் வசிக்கும் சிலரை இரண்டு நிலையங்கள் ஏமாற்றியது தெரியவந்தது.
மின்னணுக் கருவிகளையும் கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் உட்பட மற்றச் சாதனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ஏறக்குறைய 2 மில்லியன் ரிங்கிட் ($632,000).
முதல் சம்பவத்தில், மோசடிக் கும்பலைக் காவல்துறையினர் வளைத்துப் பிடித்தனர். அந்தக் கும்பல் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து தளங்களில் கிட்டத்தட்ட 25 வீடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை நடத்திவந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் சீனாவையும் இந்தோனீசியாவையும் சேர்ந்தவர்கள்.
“அவர்கள் முக்கியமாக முதியவர்களை இலக்காகக் கொண்டு, காதல் மோசடிகள், நாணய மோசடிகள், மின்னிலக்க நாணய மோசடிகள் முதலியவற்றின் மூலம் பெருந்தொகையை ஈட்டியதாகக் கூறப்படுகிறது,” என்று அந்த வட்டாரங்கள் கூறின.
பிடிபட்டோரில் அதிகமானவர்கள் சீனா, இந்தோனீசியா, மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இதுவரை 800க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், கைப்பேசிகள் உட்பட பல சாதனங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரிங்கிட் ($316,000).
இரண்டாவது சம்பவத்தில் சில பங்களா வீடுகள் குறிவைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சீனாவைச் சேர்ந்த 53 பேர் கைதாயினர். சீனா, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் வசிப்போரை இலக்காகக் கொண்ட மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
“ஒவ்வொரு வீட்டிற்கும் குறிப்பிட்ட ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இலக்காக ஒதுக்கப்பட்டிருந்தனர். முதலீட்டு மோசடிகள், மின்னிலக்க நாணய மோசடிகள், சட்ட நிறுவனங்களில் வேலை செய்வோரைப் போன்ற ஆள்மாறாட்டங்கள் முதலியவை அதிகம் இருந்தன,” என்றார் அதிகாரி.
அங்கிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள ஏறக்குறைய 1,000 கணினிகளும் கைப்பேசிகளும் காவல்துறையினரிடம் சிக்கின.
மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மலேசியாவுக்குள் பக்கத்து நாட்டிலிருந்து நுழைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் அங்குத் தங்கியிருக்கின்றனர்.
ஒவ்வொரு சந்தேக நபருக்கும் மாதம் 4,000 ரிங்கிட் ($1,262) கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாய் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின. இலக்குகளை எட்டுவோருக்குக் கூடுதலான தொகை தரப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
இரண்டு மோசடிக் கும்பல்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது இன்னும் தெரியவில்லை.

