இந்தோனீசியாவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு

இந்தோனீசியாவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு

2 mins read
அரசாங்கம் வழங்கிய இலவச உணவு மாதிரிகள் சேகரிப்பு
c4c4ba01-adb7-489d-98e7-047149eb565e
இலவச உணவுத் திட்டத்தைக் கண்காணிக்கும் அமைப்பைச் சீரமைக்க இந்தோனீசிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் இலவச உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 500க்கும் மேற்பட்ட பிள்ளைகள் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டார அதிகாரிகள் புதன்கிழமை (செப்டம்பர் 2) தெரிவித்தனர்.

அச்சம்பவம், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் பல பில்லியன் வெள்ளி மதிப்புள்ள இலவச உணவுத் திட்டத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அத்திட்டத்தை மேற்பார்வையிடும் அமைப்பைச் சீரமைக்க அந்நாடு முயன்றுவரும் வேளையில் நச்சுணவு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு ஜாவாவின் சிடாவர்ஜோ பகுதியில், செப்டம்பர் 1ஆம் தேதி நடந்த நச்சுணவுச் சம்பவம் குறித்து இலவச உணவுத் திட்டத்தைக் கண்காணிக்கும் தேசிய ஊட்டச்சத்து அமைப்பு விசாரணை நடத்தி வருவதாகக் கிழக்கு ஜாவா துணை ஆளுநர் எமில் தர்தாக் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 516 மாணவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பிவிட்டதாகச் சிடாவர்ஜோ உள்ளாட்சி அமைப்பின் தலைவர் சுபாந்தி கூறினார்.

இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டத்தோடு தொடர்புடைய பல நச்சுணவுச் சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன.

சமைத்த உணவைச் சரியாகச் சேமித்து வைக்காததும் காலதாமதமாக அதை விநியோகிப்பதுமே நச்சுணவுச் சம்பவங்களுக்குக் காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி நிலவரப்படி, அத்திட்டம் தொடர்பான கிட்டத்தட்ட 37,600 நச்சுணவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கல்விக்கான கண்காணிப்புக் கட்டமைப்பு என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்தது.

தரநிலைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த அமைப்பு ஏற்கெனவே இலவச உணவு திட்டத்துடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான சமையலறைகளை மூடியது.

இவ்வாண்டு ஜூன் மாதம், அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட தலைமை மாற்றம் உட்பட, அவ்வமைப்பில் அண்மையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

சைஃபுல் முஜானி ஆராய்ச்சி, கலந்தாய்வு நிறுவனம் கடந்த ஜூலை மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இலவச உணவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்