தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் சளிக்காய்ச்சல் தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து, அந்நகர நிர்வாகம் வியாழக்கிழமை (ஜனவரி 29) சுகாதார அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அங்குள்ள பள்ளிகள், சமூக நல வசதிகளில் 6,000க்கும் அதிகமானோருக்கு நோய் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அடிக்கடி கைகழுவுதல், கிருமிநாசினியைப் பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆலோசனைக் குறிப்பு வலியுறுத்துகிறது.
ஜனவரி 19 முதல் 25 வரையில் தோக்கியோ மருத்துவ நிலையங்களில் சளிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை சராசரியாக 13.83ஐ எட்டியதாக தோக்கியோ நகர நிர்வாகம் தெரிவித்தது. அந்த எண்ணிக்கை 10 அல்லது அதற்கும் மேல் உயரும்போது சுகாதார ஆலோசனை வழங்கப்படும்.
அங்கு, 2008- 2009க்குப் பிறகு 17 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரே பருவகாலத்தில் எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் புதிய சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அங்கு சளிக்காய்ச்சல் தொற்று அபாய நிலையை எட்டியது. பருவ காலத்தில் பரவும் சளிக்காய்ச்சல் குறித்து அக்டோபரில் ஆலோசனை வெளியிட்ட தோக்கியோ, தொடர்ந்து நவம்பரில் எச்சரிக்கை விடுத்தது. பின்னர் இரண்டும் நீக்கப்பட்டன.

