தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறைக்கு 80,000க்கும் அதிகமானோர் பதிவு

2 mins read
c4349da1-3aff-4865-a925-3ab7e85009aa
இந்த அணுகுமுறை ஏற்கெனவே கார்களுக்குச் செப்டம்பர் 22ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. - படம்: ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளை விரைவாகக் கடந்துசெல்லப் பயன்படுத்தப்படும் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இம்முறையைப் பயன்படுத்த 80,000க்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அணுகுமுறை ஏற்கெனவே கார்களுக்குச் செப்டம்பர் 22ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளோட்டிகள், பேருந்துப் பயணிகள், பாதசாரிகள் ஆகியோருக்கும் அது விரிவுபடுத்தப்பட்டு புதன்கிழமை (அக்டோபர் 15) முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட குடிநுழைவு அணுகுமுறைக்கான கைப்பேசி செயலியைச் சுல்தான் இஸ்கந்தர் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகம், சுல்தான் அபு பக்கர் குடிநுழைவு வளாகம் ஆகியவற்றில் உள்ள மோட்டர்சைக்கிள் தடங்களிலும் பேருந்து தடங்களிலும் பயன்படுத்தலாம்.

இந்தச் சோதனைக்கட்டத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள மைபார்டர்பாஸ் கியூஆர் முறையையும் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையையும் 400,000 மலேசியர்கள் பயன்படுத்தலாம்.

மைபார்டர்பாஸ் கியூஆர் முறைக்கான சாதனத்தில் அதற்கான கியூஆர் குறியீட்டையும் ஒருங்கிணைக்கப்பட்ட குடிநுழைவு அணுகுமுறைக்கான மைநாஸ் (MyNIISe) சாதனைகளில் அதற்கான குறியீட்டையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார்.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் புதிய குடிநுழைவு முறை செயல்பாட்டில் உள்ள சோதனைச்சாவடிகளில் அம்முறையைப் பயன்படுத்தும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள் என மலேசிய அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

63 நாடுகள், வட்டாரங்களைச் சேர்ந்த பயணிகள் மலேசியாவிற்குள் நுழைய இந்தப் புதிய கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் 71 நாடுகள், வட்டாரங்களைச் சேர்ந்த குடிமக்கள் மலேசியாவிலிருந்து புறப்படுவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்