கோலாலம்பூர்: ஒரு காலத்தில் மலேசியாவின் முதன்மை விமான நிலையமாக இருந்த சுபாங் விமான நிலையம் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது.
பத்தாண்டு மறுஉருவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த மாதத்திலிருந்து அந்நிலையத்தை அதிக விமானச் சேவைகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
அதிக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது பயணிகளிடமும் தொழில்துறையினரிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தின் மதிப்பு, கோலாலம்பூருக்கு அருகாமையில் இருப்பது ஆகிய சிறப்புகளைக் குறிப்பிடும் அவர்கள், பொதுப் போக்குவரத்து இணைப்பு, அப்பகுதியில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் இரைச்சல் போன்ற பிரச்சினைகளையும் சுட்டினர்.
3.7 பில்லியன் மலேசிய ரிங்கிட் (S$1.08 பில்லியன்) செலவாகும் என்று எதிர்பார்க்கப்படும் சுபாங் விமான நிலைய மறுஉருவாக்கத் திட்டம் 2030ல் நிறைவுபெறும்.
சிலாங்கூரில் அமைந்திருக்கும் சுபாங் விமான நிலையத்தை நவீன, பசுமை நகர விமானநிலைய முனையமாகவும் வர்த்தக விமானப் போக்குவரத்து மையமாகவும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், வான்வெளித் தொழில்துறைக்கான பராமரிப்பு, பழுது பார்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வு, மேம்பாட்டுக்கான மையமாகவும் மேம்படுத்த உள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் ஜூலை 30ஆம் தேதி ஊடக மாநாடு ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த 1965ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட, சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் சுபாங் விமான நிலையம், 1998ல் புதிதாகக் கட்டப்பட்ட கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அனைத்துலக விமானச் சேவைகள் மாற்றப்படும் வரையில், மலேசியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நுழைவாயிலாக இருந்தது.
சுபாங் - சிங்கப்பூரின் சிலேத்தார் பாதைக்கு சேவையாற்றும் ஃபயர்ஃபிளை, எஸ்கேஎஸ் ஏர்வேஸ், பாத்தெக் ஏர் போன்ற உள்நாட்டு வழித்தடங்களில் செயல்படும் சில சிறிய விமானச் சேவைகள் மட்டுமே சுபாங் விமான நிலையத்திலிருந்து சேவையாற்றுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், மலேசியாவின் ஃபயர்ஃபிளை, ஏர்ஏசியா, இந்தோனீசியாவின் டிரான்ஸ்னுசா உட்பட சுபாங் விமான நிலையத்திலிருந்து ஆறு விமான நிறுவனங்கள் சிறிய விமானங்களை இயக்கத் தொடங்கின. சிங்கப்பூரின் மலிவுக் கட்டணச் சேவையான ஸ்கூட் செப்டம்பர் 1 முதல் சாங்கி - சுபாங் பாதையில் சேவையைத் தொடங்கும்.
கேஎல்ஐஏ கோலாலம்பூரிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் தொலைவில் சிலாங்கூரின் செப்பாங்கில் அமைந்துள்ளது.
கோலாலம்பூர் நகர மையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலேயே சுபாங் விமான நிலையம் அமைந்துள்ளது. நேரக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் வணிகப் பயணிகளை இது கவரும் என்று கூறிய திரு லோக், ஆண்டுக்கு மூன்று மில்லியன் பயணிகளை கையாள்வது திட்டம் என்று குறிப்பிட்டார்.
அதிக பயணிகளைக் கையாள வசதியாக, புதிய குடிநுழைவு, வெளியேற்ற சேவை முகப்புகள், பயணப் பொதிகளுக்கான தானியக்கச் சேவை மையங்கள் போன்றவை கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்டன.
எனினும், சுபாங் விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் நகரத்துக்கும் இடையிலான தடையற்ற போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் குறிப்பிட்டனர்.