சோல்: அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்குப் பிறப்பிக்கப்பட்ட கைதாணைக்கு அதிபர் பாதுகாப்புச் சேவைத்துறை இணங்கவேண்டும் என்று உத்தரவிடுமாறு புலனாய்வுத் துறை அதிகாரிகள் இடைக்கால அதிபருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள யூன் கடந்த வெள்ளிக்கிழமை புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்புச் சேவைத் துறையினரும் ராணுவப் படையினரும் தடுத்தனர். அந்தப் போராட்டம் ஆறு மணி நேரம் நீடித்தது.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் கைது நடவடிக்கையை ரத்து செய்தனர்.
உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம், இடைக்கால அதிபர் சோய் சாங் மொக்கிடம் அந்தக் கோரிக்கையை விடுத்ததாகக் கூறியது.
ராணுவச் சட்ட அறிவிப்புக்குப் பிறகு, தென்கொரிய அதிபர்மீது சென்ற மாதம் அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
“நம்மைத் தடுப்பதற்குக் கிட்டத்தட்ட 200 அதிகாரிகள் இருந்தார்கள் என்று நாங்கள் மதிப்பிட்டோம். இருப்பினும், அந்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் இருந்திருக்கலாம்,” என்று புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
“அது ஆபத்தான சூழலாக இருந்தது,” என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கத்திற்கு எதிராகக் கலவரம் ஏற்படுத்தியதற்கான குற்றச்சாட்டுகளை யூன் எதிர்நோக்குகிறார். அந்தக் குற்றங்களுக்கு அதிபருக்குரிய விலக்குகள் அளிக்கப்படமுடியாது. அதனால், அவர் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
கைதாணை நிறைவேற்றப்பட்டால், பதவியில் இருக்கும்போதே கைதுசெய்யப்படும் முதல் தென்கொரிய அதிபராக அவர் இருப்பார்.
அரசியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து, யூன் தலைநகர் சோலில் உள்ள அவரது அதிபர் மாளிகையில் ஒளிந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று முறை விசாரணைக்காக அழைக்கப்பட்டும், அவர் வெளியில் வர மறுத்துவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை, யூனைக் கைதுசெய்ய அதிகாரிகள் சென்றபோது, எதிர்பாரா சம்பவங்கள் நிகழ்ந்தன. சண்டைகள் ஏற்பட்டன என்றும் ஆனால் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவில் பிறப்பிக்கப்பட்ட கைதாணை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 6) காலாவதியாகிவிடும். அதற்கு முன்னர் யூனைக் கைதுசெய்ய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மீண்டும் முயற்சி எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், கைதாணை காலாவதியானால் அவர்கள் மற்றொரு கைதாணைக்கு விண்ணப்பிக்கலாம். யூனின் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 14ஆம் தேதி தொடங்கும் என்று அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு அவர் செல்லாவிட்டால், அவர் இல்லாமலேயே அது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

