சிட்னி: சிறுவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைகளை மேலும் கடுமையாகக் கண்காணிக்கத் தாம் விரும்புவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட தடைகள் ஆஸ்திரேலியப் பதின்ம வயதினர் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தவிர்ப்பதைப் பெரிதாகப் பாதிக்கத் தவறிவிட்டது என்று அண்மைய ஆய்வு தெரிவித்தது. அதையடுத்துப் பிரதமர் அல்பனிஸ் கருத்துரைத்தார்.
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டகிராம், கூகல் நிறுவனத்தின் யூடியூப் போன்ற செயலிகளைக் கைப்பேசியில் 16 வயதுக்குட்பட்டோர் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைகளைப் பதின்மவயதினர் எந்த அளவு பின்பற்றுகின்றனர் என்பதை அரசாங்கம் சோதிக்கவுள்ளது.
அந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் செயலிகளைப் பயன்படுத்தப் புதிய கணக்குகளைப் பதின்மவயதினர் திறப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்பது அரசாங்க விதியாகும்.
“எவ்வித சட்டபூர்வ எதிர்ப்பையும் கையாண்டு, நாட்டின் சட்டங்கள் வலுவானதாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும்,” என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்திடம் பிரதமர் அல்பனிஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் முயற்சிகளைப் பல உலக நாடுகள் கவனித்து வருகின்றன.
பதின்மவயதினரின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அந்நாடுகளும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றன.
இளையர்களின் உடல், மனநலத்தைச் சமூக ஊடகப் பயன்பாடு பாதிக்கிறது என்பதே பலரின் கவலை.

