உலகின் பாதிக்கும் மேற்பட்ட மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது: ஐநா அறிக்கை எச்சரிக்கை

உலகின் பாதிக்கும் மேற்பட்ட மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது: ஐநா அறிக்கை எச்சரிக்கை

2 mins read
உலகளவில் 52.5 விழுக்காட்டுப் பகுதிகளில் மண்ணின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
01c26b10-5c8b-4737-a5fb-3c76246b0f77
உலகளவில் 52.5 விழுக்காட்டுப் பகுதிகளில் மண்ணின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பாரிஸ்: உலகின் பாதிக்கும் மேற்பட்ட மண் வளம் மோசமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) உணவு, வேளாண் அமைப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அது உலகளாவிய உணவு விநியோகத்திற்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அது கூறியது.

உணவு உற்பத்தியில் 95 விழுக்காட்டிற்கு மண் வளம் ஆதரவாக உள்ளது. உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்கத்தில் 59 விழுக்காட்டிற்கு மண் புகலிடமாகத் திகழ்கிறது. பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய கரியமில வாயுவைச் சேமித்து வைக்கும் காரணியாகவும் அது இயங்குகிறது என்று அறிக்கை தெரிவித்தது.

ஆனால், உலகளவில் 52.5 விழுக்காட்டுப் பகுதிகளில் மண்ணின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 14 விழுக்காட்டுப் பகுதிகளில் மட்டுமே மண் வளம் நல்ல நிலையில் உள்ளது.

மண் அரிப்பே இதற்கு மிக முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.

ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு, நிலத்தடி நீர் உப்புத்தன்மை அடைவது, நகரமயமாக்கல், பருவநிலை மாற்றம் ஆகியவை இப்பாதிப்பை மேலும் தீவிரமாக்குகின்றன.

மண் வளத்தைப் பாதுகாக்கும் உழவு முறைகள், நிலத்தை மூடி வளர்க்கப்படும் பயிர்கள், மரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விவசாயம், உரங்களை முறையாகப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகள் குறித்துத் தெரிந்திருந்தும், அவை பரவலாகச் செயல்பாட்டிற்கு வரவில்லை.

விவசாயிகளுக்குப் போதிய வளங்கள் கிடைக்காததும், தொடக்கச் செலவுகள் அதிகமாக இருப்பதுமே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ள ஐநா அமைப்பு, விவசாயிகளுக்கு நிதிச் சலுகைகளை வழங்க பரிந்துரைத்துள்ளது.

மங்கோலியத் தலைநகர் உலான்பாதரில் நடைபெற்று வரும் பாலைவனமாக்கலுக்கு எதிரான அனைத்துலக உச்சநிலை மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வறட்சியை எதிர்கொள்வதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
உலகமயமாதல்மண்டாய்மண்ட்லா மசேகோமண்ஐநாவிவசாயம்அறிக்கைஉலகம்வேளாண்மை