‘புகைப்படத் தரகர்களை’ ஒடுக்க கேஎல்சிசி-யில் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள்

‘புகைப்படத் தரகர்களை’ ஒடுக்க கேஎல்சிசி-யில் கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள்

2 mins read
a19d974b-a250-406e-b947-1bb69aee1adb
கடந்த ஞாயிற்றுக்கிழமை கேஎல்சிசி பகுதியில், ஒரு குழுவிற்கும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்ற ஒருவரை உரிமம் இல்லாத 18 புகைப்படக்காரர்கள் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: ‘புகைப்படத் தரகர்கள்’ கும்பலை ஒடுக்குவதற்காக, கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (கேஎல்சிசி) பகுதியைச் சுற்றி, விரைவில் மேலும் பல கண்காணிப்புக் கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்படவுள்ளன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, கேஎல்சிசி பிராப்பர்ட்டி ஹோல்டிங்ஸ் மற்றும் கோலாலம்பூர் நகர மன்றம் ஆகியவற்றுடன் தனது அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும் என்று பிரதமர் அலுவலக (கூட்டரசுப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

“சிசிடிவி கேமராக்கள் கேஎல்சிசி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. அனுமதியின்றி இதுபோன்ற வணிக நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களின் முகங்களை அடையாளம் காணும் வகையில், வெளிப்புறங்களில் அதிகமான சிசிடிவி கேமராக்களை எவ்வாறு பொருத்துவது என்பது குறித்து, நான் அவர்களுடனும் கோலாலம்பூர் நகர மன்றத்துடனும் கலந்துரையாடுவேன்,” என்று அவர் சனிக்கிழமை (மார்ச் 28) செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கேஎல்சிசி பகுதியில், ஒரு குழுவிற்கும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்ற ஒருவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் உரிமம் இல்லாத 18 புகைப்படக்காரர்கள் தொடர்பான பிரச்சினைக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

இந்தப் பிரச்சினை தொடர்வதைத் தடுக்க, காவல்துறையினரும் கோலாலம்பூர் நகர மன்ற அமலாக்க அதிகாரிகளும் அடிக்கடி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் இயோ கூறினார்.

சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை

“சுற்றுலாப் பயணிகளும் மலேசியர்களும் துன்புறுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், அது நாட்டின் பெயரையும் களங்கப்படுத்துகிறது. இதுபோன்ற சண்டைகள் நடக்கக்கூடாது. மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

இதன் தொடர்பில், 17 முதல் 45 வயதுக்குட்பட்ட, உரிமம் இல்லாத 18 புகைப்படக் கலைஞர்கள், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148ன் கீழ் கூடுதல் விசாரணைக்காக கேஎல்சிசியின் சுற்றுவட்டாரத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக, டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் சஸாலீ ஆடம் மார்ச் 27ஆம் தேதி அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்