இது 'கொசு' சூறாவளி!

1 mins read
aa861bf1-7754-453d-bb04-3bff5dc1c417
மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நன்னீர்ப் பேரேரிக்குமேல் மொய்த்த பூச்சிப்படை. காணொளிப்படம்/டுவிட்டர் -

முதலில் கண்டபோது அது சூறாவளி என்றே மக்கள் நினைத்தனர்.

ஆயினும், அது மேலும் அடர்த்தியாகி, ஒரு வடிவமின்றி கருமேகம் போலத் திரண்டு, ஏரியின் குறுக்கே அலைந்து, பின்னர் வீடுகளை ஒட்டிப் பறந்தபோதுதான் அது சூறாவளியன்று, பூச்சிகளின் பெரும்படை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

இந்தக் காட்சி பூமிக்கு அழிவுநாள் நெருங்கிவிட்டதைக் குறிப்பிடுவதாகவும் சிலர் கூறினர்.

மத்திய அமெரிக்காவின் மிகப் பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான தென்மேற்கு நிகராகுவாவில் உள்ள கோசிபோல்கா ஏரிக்கு அருகே கடந்த வாரம் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சில செய்தித்தளங்கள் அப்பூச்சிகளைக் 'கொசுக்கள்' எனக் குறிப்பிட்டன. வேறு சில அதனை ஏரி ஈக்கள் அல்லது மனிதர்களைக் கடிக்காத கொசுவினப் பூச்சிகள் என்று குறிப்பிட்டன.

ஆண்டின் நடுப்பகுதியில் பூச்சிகள் இப்படி மொய்ப்பது வழக்கமான ஒன்றுதான் எனக் கூறப்படுகிறது. ஆண் பூச்சிகள்

இனப்பெருக்கத்திற்காக பெண் பூச்சிகளை நாடும்போது, அவை இப்படிப் பெருந்திரளாகக் காட்சியளிக்கும். இப்படிப் பெருந்திரளாக இருக்கும்போது பறவைகளுக்கும் அவை இரையாகிவிடலாம்.

மழைக்காலத்தில் பூச்சிகள் இப்படி மொய்ப்பது பொதுவாக இடம்பெறுவதுதான் என்றும் சிறகுள்ள இப்படையால் மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் எந்தத் தீங்கும் நேராது என்றும் வேளாண் வானியல் வல்லுநர் அகஸ்டின் மொரேரா கூறுகிறார்.