சிட்னி: பதினாறு வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் விதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தடை நடப்பிற்கு வந்து மூன்று மாதங்களாகிவிட்டது.
ஆயினும், 16 வயதிகுட்பட்ட பத்தில் எட்டுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதை அந்நாட்டின் இணைய ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்துள்ளது. இதற்குக் காரணம், தொழில்நுட்ப நிறுவனங்கள் திறம்பட வயதுச் சரிபார்ப்புகளைச் செயல்படுத்தத் தவறியதுதான் எனக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 31) வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி தடை அமலுக்கு வருவதற்கு முன்பு 10 முதல் 15 வயதுக்குட்பட்ட பெரும்பாலான பிள்ளைகள் எவ்வளவு அடிக்கடி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினார்களோ, அதே அளவு மார்ச் மாதத்திலும் அவர்கள் அதைப் பயன்படுத்தி வந்ததாக ‘இசேஃப்டி’ ஆய்வு கண்டறிந்துள்ளது. அதே நேரத்தில், அவர்களின் பழக்கவழக்கங்கள் குறித்த பெற்றோரின் விழிப்புணர்வும் குறைந்துள்ளது.
கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை 52 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காட்டாகக் குறைந்தபோதிலும், பிள்ளைகளின் தொடர்ச்சியான சமூக ஊடகப் பயன்பாடு நீடித்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
“தடை நடப்பிற்கு வருமுன் சமூக ஊடகக் கணக்கு வைத்திருந்த 16 வயதுக்குட்பட்டோரில் பெரும்பாலானோர், மூன்று மாதக் காலக்கட்டத்தில் தங்கள் கணக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது புதிய கணக்குகளை உருவாக்கவோ முடிந்தது. இதற்கு, சமூக ஊடகத் தளங்கள் பயனுள்ள வயதுச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது,” என்று இசேஃப்டி அறிக்கை விளக்கியது.
பிள்ளைகள், இளையர்களின் மன மற்றும் உடல்நலத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த கவலைகள் காரணமாக, ஆஸ்திரேலியா உலகில் முதல்முறையாக இந்தத் தடையை அறிமுகப்படுத்தியது. அத்தடையின் செயலாக்கத்தை பல நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. மேலும், தங்கள் நாடுகளிலும் அத்தகைய தடையை அறிமுகப்படுத்த முயன்று வருகின்றன.
தடைக்கு முன்பு, கணக்கெடுப்பில் பங்கேற்ற பிள்ளைகளில் கிட்டத்தட்ட 86 விழுக்காட்டினர், வயதுக் கட்டுப்பாடுள்ள குறைந்தது ஒரு தளத்தையேனும் பயன்படுத்தியதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், தடை நடப்பிற்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் அந்த எண்ணிக்கை 81 விழுக்காட்டுக்கும் அதிகமாகவே இருந்தது என்று அந்த அறிக்கை கூறியது.

