கொலம்பியா: 2022ஆம் ஆண்டு இணக்கம் காணப்பட்ட இயற்கைப் பாதுகாப்பு இலக்குகளை எட்டுவதில் உலக நாடுகள் போதிய முன்னேற்றம் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இயற்கை அழிக்கப்படுவதை நிறுத்துவது தொடர்பில் குன்மிங்-மாண்ட்ரியோல் உலகளாவிய பல்லுயிரினக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையின்கீழ் இணக்கம் காணப்பட்டது.
ஈராண்டுகள் கடந்தபின்னும் அதுதொடர்பான இலக்குகளை எட்டுவதில் உலக நாடுகள் பின்தங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொலம்பியாவில் இரண்டு வாரங்கள் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) காப்16 உச்சநிலை மாநாட்டில், அந்த இலக்குகளுக்குத் தரும் ஆதரவை நிரூபிக்கும்படி நாடுகளுக்கு நெருக்குதல் தரப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரங்களை வெட்டுதல், அதிக அளவில் மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளால் இயற்கை அழிக்கப்படும் விகிதம் இன்னும் குறையவில்லை என்றும் அரசாங்கங்கள் அவற்றின் பல்லுயிர்ச் சூழல் திட்டங்களில் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இயற்கைப் பாதுகாப்புக்காக ஒதுக்கவேண்டிய பல பில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதிலும் அரசாங்கங்கள் சிரமத்தை எதிர்கொள்வதாகத் தெரிகிறது.
பெரும்பாலான நாடுகள் காப்16 மாநாட்டிற்கு முன் தேசிய பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்பு உத்திகளையும் செயல்திட்டங்களையும் சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றின் முயற்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவை இது தெளிவாக உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) நிலவரப்படி மொத்தமுள்ள 195 நாடுகளில் 31 நாடுகள் மட்டுமே ஐநாவிடம் அவ்வாறு சமர்ப்பித்துள்ளன.
சிங்கப்பூர் அதன் 20 இலக்குகளை அக்டோபர் 20ஆம் தேதி சமர்ப்பித்தது.

