அண்டரண்டப் பறவை (அல்பட்ராஸ், Albatross) ஒன்று 74 வயதில் முட்டையிட்டு சாதனை படைத்துள்ளது.
உலகின் பழமையான காட்டுப் பறவையான அது பசிபிக் பெருங்கடலில் உள்ள மிட்வே அட்டோல் தேசிய வனவிலங்கு காப்பகத்தில் முட்டையிட்டுள்ளது.
அப்பறவை முட்டையிடுவதும் தன் துணையுடன் முட்டையைக் கவனமாக அடைகாப்பதும் படமாக்கப்பட்டுள்ளது.
அண்டரண்டப் பறவை தென்துருவப் பெருங்கடலிலும் (அண்ட்டார்டிக் ) வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.
பொதுவாக அண்டரண்டப் பறவைகளின் ஆயுட்காலம் 12 முதல் 40 ஆண்டுகள் வரை என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், விஸ்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பறவையின் வயதும் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்யும் திறனும் ஓர் அசாதாரண விதிவிலக்கு எனக் கூறப்படுகிறது.
விஸ்டம் ஐந்து வயதில் 1956ஆம் ஆண்டு முட்டையிட்ட பிறகு முதன்முதலில் அடையாளம் காணப்பட்டு குறியிடப்பட்டது. எல்லா முரண்பாடுகளையும் மீறி தனது வாழ்நாளில் 30 குஞ்சுகளுக்கு மேல் அப்பறவை வளர்த்ததாக கருதப்படுகிறது. அது ஆக அண்மையாக 2021ல் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது.
அமெரிக்க மீன், வனவிலங்கு சேவை (USFWS) டிசம்பர் 4ஆம் தேதி விஸ்டம் மற்றொரு முட்டையை இட்டதாகவும், அதற்கு முந்தைய வாரத்தில் ஒரு புதிய துணையை அது கண்டறிந்ததாகவும் அதன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.

