தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் இன்னொரு மகனையும் பறிகொடுத்த தாய்

2 mins read
20b6bc4c-c279-4635-a039-d6549a246dbf
கார் மோதியதால் மாண்டுபோனார் 19 வயது அமீன் ஃபக்ருல்லா ஃபையஸ். - படம்: மலேசியக் காவல்துறை

பெட்டாலிங் ஜெயா: கடந்த 2022ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் தன் மகன்களில் ஒருவரைப் பறிகொடுத்ததால் இதயம் நொறுங்கிப் போனார் மலாக்காவைச் சேர்ந்த ஒரு தாய்.

இந்நிலையில், இம்முறையும் அதுபோல நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் தன் இளைய மகனையும் இன்னொரு சாலை விபத்தில் இழந்ததால் பேரதிர்ச்சியில் இருக்கிறார் அஸ்லினா அபு, 48, என்ற அப்பெண்மணி.

“ஈராண்டுகளுக்குமுன் என் மூத்த மகனைப் பறிகொடுத்தேன். இப்போது, அவனுடைய இளைய சகோதரனையும் இழந்துவிட்டேன். நாங்கள் இப்போது அனுபவிக்கும் துயரத்தை யாராலும் புரிந்துகொள்ள இயலாது,” என்றார் திருவாட்டி அஸ்மினா.

பதினொரு உடன்பிறப்புகளில் ஏழாவது ஆளான அமீன் ஃபக்ருல்லா ஃபையஸ், 19, புதன்கிழமை இரவு 1 மணியளவில் புக்கிட் ரம்பாயின் ஜாலான் தஞ்சுங் மின்யாக் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாண்டுபோனார்.

அவரது யமஹா மோட்டார்சைக்கிள், இன்னொரு கார்மீது மோதி விபத்துக்குள்ளானது.

அமீனின் மூத்த சகோதரர் நசுலுல்லா, கடந்த 2022ஆம் ஆண்டு பந்தாய் புத்ரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கும் அப்போது வயது 19தான்.

“நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் எங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டதால் எனக்கும் என் கணவருக்கும் அச்சமாக இருக்கிறது,” என்று கண்ணீருடன் சொன்னார் திருவாட்டி அஸ்லினா.

கடைசியாக அமீன் தமக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, புன்னகைத்தவாறே வீட்டை விட்டுக் கிளம்பியதை அவர் நினைவுகூர்ந்தார்.

அப்போது அவர் தனது ‘சுவெட்டரை’ அணிந்து செல்லும்படி கூறினார். அதனை அணிந்த நிலையிலேயே அமீன் இறந்துபோனார்.

எப்படியாயினும் அமீனின் இறப்பைத் தானும் தன் குடும்பத்தினரும் தாங்கிக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற திருவாட்டி அஸ்லினா, அதே நேரத்தில் தன் மகனின் இறப்பில் காவல்துறை நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்