ஆறு வயது மகளை விற்ற தாய்க்கு ஆயுள் சிறை

1 mins read
b2879b1c-f84b-4bda-b5d7-30c68fa96bc8
ரேக்கல் கெல்லி ஸ்மித்துக்கும் அவரது கூட்டாளிகள் இருவருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கேப் டவுன்: தன் ஆறு வயது மகளைக் கடத்தி விற்ற தென்னாப்பிரிக்கப் பெண் இனி வாழ்நாள் முழுவதையும் சிறையில்தான் கழித்தாக வேண்டும்.

அக்குற்றத்திற்காக ரேக்கல் கெல்லி ஸ்மித், 35, என்ற அப்பெண்ணிற்கும், அவருடைய காதலர் ஜேக்கன் அப்போலிஸ், நண்பர் ஸ்டீவனோ வேன் ரைன்ஸ் என்ற இருவருக்கும் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் வியாழக்கிழமை (மே 29) வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

கேப் டவுன் அருகிலுள்ள சல்டானா பே எனும் பகுதியிலிருந்து ஜோஷ்லின் ஸ்மித் என்ற அச்சிறுமி 2024 பிப்ரவரியில் திடீரென மாயமானார்.

அதன் தொடர்பில் இதுவரை பெரிய அளவில் விளம்பரம் செய்தும் இன்னும் அச்சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தென்னாப்பிரிக்காவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்குத் தொடர்பில் ஆறு வாரம் விசாரணை நடத்தப்பட்டது.

“ஆட்கடத்தலுக்காக உங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. கடத்தல் குற்றத்திற்காக ஆளுக்குப் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது,” என்று நீதிபதி நேதன் எராஸ்மஸ் அறிவித்ததை நீதிமன்றத்தில் இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

இதனிடையே, தென்னாப்பிரிக்க எல்லையைத் தாண்டியும் சிறுமி ஜோஷ்லினைத் தேடும் பணி தொடரும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீர்ப்பு வாசிக்கப்படுமுன், “என் பேத்தியைக் கொண்டுவந்துவிடு அல்லது அவள் எங்கிருக்கிறாள் என்றாவது சொல்லிவிடு,” என்று ஜோஷ்லின் பாட்டி அமண்டா ஸ்மித் டேனியல்ஸ், தம் மகள் கெல்லியிடம் மன்றாடினார்.

எத்தகைய தீர்ப்பும் தம் பேத்தியை மீட்டுக்கொண்டுவந்துவிடாது என்றும் அவர் ‘நியூஸ்ரூம் ஆப்பிரிக்கா’ ஊடகத்திடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்