கோலாலம்பூர்: மலேசியாவில் லாரி மோதி கொல்லப்பட்டதாக நம்பப்படும் குட்டி யானையை அதன் தாய் காப்பாற்ற முயன்ற உருக்கமான காட்சி காணொளியில் பதிவானது.
பேராக் மாநிலத்தில் கெரிக்-ஹெலி கிழக்கு-மேற்கு விரைவுச்சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தாய் யானை லாரியைத் தள்ளிவிட்டு சேயைக் காப்பாற்ற முயன்றது. தனது சேயைப் பாதுகாக்க வேண்டும் என்ற தாய் யானையின் விடாமுயற்சி சமூக ஊடகப் பயனர்களின் மனத்தைத் தொட்டுள்ளது.
ஒரு நிமிடம் 11 விநாடிகள் நீடித்த இந்தக் காணொளி இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டது என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது.
தாய் யானை சம்பவ இடத்திலிருந்து விலக மறுத்தது காணொளியில் தெரிந்தது. அது, தனது சேயைக் காப்பாற்ற முயன்றது தென்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதிகாலை விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. கோழிகளை ஏந்திச் சென்றதாக நம்பப்படும் லாரி யானைக் ன்றுடன் விபத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தக் குட்டி யானைதான் லாரியின் முன்பகுதிக்குக்கீழ் சிக்கியிருந்தது.
அதிகாலை 3.30 மணியளவில் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பேராக் வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் பிரிவு இயக்குநர் யூசோஃப் ஷரிஃப் உறுதிப்படுத்தினார்.
மாண்ட சேயின் உடலை மீட்பதற்காக, சுமார் 2.2 டன் எடைகொண்ட தாய் யானையை அப்பிரிவு, பாதுகாப்பான இடத்துக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றது. சம்பவ இடத்தைத் தாங்கள் சென்றடைந்தபோது ஐந்து வயது குட்டி யானை லாரி மோதி மாண்டதாகப் பிரிவு தெரிவித்தது.