இலவச உணவுத் திட்டத்தை எதிர்க்கும் இந்தோனீசியத் தாய்மார்

2 mins read
3ddcbd19-1c17-49ea-9d03-eb2f5e0b63ae
இந்தோனீசிய தாய்மார் கூட்டமைப்பின்கீழ் தாய்மார் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.  - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நாட்டில் தொடங்கிய இலவச சத்துணவுத் திட்டத்தில் ராணுவமும் காவல்துறையும் ஈடுபடுவது வெகுவாகக் குறைகூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் பல பின்னடவுகளை எதிர்கொண்டுள்ளது. இலவசமாக வழங்கப்பட்ட உணவால் நச்சுணவுச் சம்பவங்கள் தலைதூக்கின. அதில் நாடளவில் 11,000க்கும் அதிகமான பிள்ளைகள் பாதிக்கப்பட்டனர்.

அதையடுத்து இலவச உணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய சத்துணவு அமைப்பின் வளாகத்துக்கு வெளியே பலரும் இந்த வாரம் அமைதி போராட்டம் நடத்தினர்.

இந்தோனீசிய தாய்மார் கூட்டமைப்பின்கீழ் தாய்மார் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் இலவச உணவுத் திட்டத்தை உடனடியாக நிறுத்தும்படி கூறியதுடன் பிள்ளைகளின் நலனைப் பாதிக்கும் சுகாதார நெருக்கடி என்று திட்டத்தைச் சாடினர்.

திட்டத்தில் சத்துணவு வல்லுநர்களும் குழந்தைநல மருத்துவர்களும் ஈடுபடுத்தப்படவேண்டும் என்ற தாய்மாரில் சிலர், உணவு என்பது குடிமக்களால் நிர்வகிக்கப்படவேண்டுமே தவிர ராணுவத்தாலோ காவல்துறையாலோ அல்ல என்றனர்.

உணவை விநியோகிக்கவும் அதை மேற்பார்வையிடவும் அரசாங்கம் ராணுவத்தையும் காவல்துறையையும் ஈடுபடுத்தியிருப்பது ஏற்க முடியாது என்ற அவர்கள், பள்ளிப் பிள்ளைகளின் உணவை நிர்வகிப்பது அவர்களின் பொறுப்பல்ல என்று வாதாடினர்.

நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு திட்டத்தைக் கொண்டுசேர்ப்பதில் தளவாடச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறிய இந்தோனீசிய அரசாங்கம், சமையலறைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ராணுவத்திடமும் காவல்துறையிடமும் கொடுத்துள்ளது.

600க்கும் அதிகமான சமையலறைகளின் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும் இந்தோனீசியக் காவல்துறை கூடுதலாக 100 சமையலறைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது.

இந்தோனீசிய ராணுவம் 452 சமையலறைகளின் நிர்வாகத்தை நடத்துகிறது.

ராணுவமும் காவல்துறையும் அளித்துவரும் ஆதரவை மீறி தோல்வியை எதிர்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்