எவரெஸ்ட் சிகரம் ஏறுவோருக்குப் புதிய கட்டுப்பாடு

2 mins read
மலைகளில் துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை!
4003ed42-3f0a-4a39-8655-2e97e2d334f2
எவரெஸ்ட் மலையில் குப்பைச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஷெர்பா. - கோப்புப்படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோர் இனி தங்களது மலக்கழிவுகளைப் பையில் போட்டு, மீண்டும் அடிவார முகாமிற்குக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

“எங்களது மலைகளில் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது,” என்று பாசாங் லாமு ஊராட்சித் தலைவர் மிங்மா ஷெர்பா, ‘பிபிசி’ ஊடகத்திடம் கூறினார்.

மிகுந்த வெப்பமான சூழலில், மலையில் விடப்படும் மனிதக்கழிவுகள் முழுமையாக மட்குவதில்லை.

“மலைப்பாறைகளில் மனிதக் கழிவுகள் கண்ணுக்குத் தென்படுவதாகப் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் மலையேறிகள் சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்படுகிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது,” என்றார் மிங்மா.

இதனையடுத்து, உலகின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்ட்டிலும் அதனை ஒட்டியுள்ள லோட்சே மலையிலும் ஏறுவோர் அடிவார முகாமிலேயே கழிவுப்பைகளை விலைகொடுத்து வாங்கிச் செல்ல வேண்டும். கீழே இறங்கியபின் அடிவார முகாமில் அவற்றை ஒப்படைக்க வேண்டும்.

மலையேற்றப் பருவத்தின்போது மலையேறிகள் பெரும்பாலான நாள்களை அடிவார முகாமில்தான் கழிப்பர். அங்குத் தனிக் கூடாரம் அமைத்து, கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

ஆனால், மலையேறத் தொடங்கியபின் நிலைமை சிரமமாகிவிடும்.

மேலேறும்போது மலையேறிகளும் உதவிப் பணியாளர்களும் குழி தோண்டி அதில் கழிவை வெளியேற்றுவர். ஆயினும், அதிகப் பனி இல்லாத இடங்களில் அவர்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்தியாக வேண்டும்.

வெகுசிலரே தங்களது கழிவுகளை மட்கும் பையில் போட்டு, கீழே திரும்பும்போது கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வப்போது தூய்மைப் பணிகள் இடம்பெற்று வந்தாலும், எவரெஸ்ட்டிலும் அதையொட்டியுள்ள மலைகளிலும் கழிவுகளும் குப்பைகளும் பெரும்பிரச்சினையாக இருந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்